செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:40 IST)

தளபதி 65 படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார் கடந்து வந்த பாதை!

இப்போது கோலிவுட்டின் அதிகம் பேசப்படும் இயக்குனராக மாறியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் இப்போது அதிகம் பேசப்படும் படமாக தளபதி 65ம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இருந்து வருகின்றனர். தான் இயக்கிய ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருக்கும் விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இத்தனைக்கும் இந்த படத்தை இயக்க இருந்த இயக்குனர் முருகதாஸ் வெளியேறிய பின்னர் அவர் இடத்தை நிரப்ப விஜயாலும் சன் தொலைக்காட்சியாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நெல்சன் தமிழ் சினிமாவில் எந்த முன்னணி இயக்குனரிடமும் உதவியாளராக வேலை செய்தது இல்லை. விஜய் தொலைக்காட்சியில் நடந்த பல நிகழ்ச்சிகளுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுபவராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நெல்சன். அப்போது அங்கே தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். அந்த படத்தின் ஒரு டீசர் கூட இணையத்தில் வெளியானது. ஆனால் சில நாட்கள் படப்பிடிப்போடு அந்த படம் பெட்டியில் முடங்கியது.(அப்போது சிம்பு ஆரம்பித்த பல படங்கள் முடங்கின)

இதையடுத்து 5 ஆண்டுகள் சினிமாவில் தனது இடத்தை பிடிக்க போராடிய நெல்சனுக்கு வாழ்வளிக்கும் விதமாக கோலமாவு கோகிலா படத்தின் கதையை ஓகே செய்கிறார் நயன்தாரா. அந்த படத்தை சிறப்பாக எடுத்து முடித்து வெற்றிப்படமாகவும் மாற்றினார் நெல்சன். அதற்கடுத்த படமாக தனது நீண்டகால நண்பர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த படம் இப்போது பின் தயாரிப்பு பணிகளில் உள்ளது.

இந்த இரு படங்களிலும் இசையமைப்பாளாராக பணியாற்றிய அனிருத் நெல்சனின் திறமையால் கவரப்பட்டு விஜய்யிடம் இவரைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அதன் பின்னரே விஜய் இவரிடம் கதை கேட்டு அந்த கதை பிடிக்க ஓகே செய்துள்ளார். இப்போது விஜய்யை சச்சின் படத்துக்கு பிறகு ஒரு முழு நீளக் கதையில் இயக்க நெல்சன் தீவிரமாக வேலை செய்து வருகிறார்.