1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:50 IST)

நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிடுமா? கடம்பூர் ராஜூ பதில்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு எதுவும் நடைபெறாததால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் உள்ளனர். எனவே தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் பெரிய நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்து தயாரிப்பாளருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து எந்த பெரிய நடிகரும் இதுவரை பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது ’நடிகர்கள் சம்பளம் குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் அதனை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். தயாரிப்பாளர் இயக்குனர் விநியோகிஸ்தர்கள் ஆகியோர் கலந்து பேசி நடிகர்களின் சம்பள குறைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது என்றும் அரசு இதில் தலையிட வாய்ப்பு இல்லை’ என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் திரையரங்குகளுக்கு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு ’திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலைப் பொருத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்