பேன் இந்தியா படமாக உருவாகும் ஜி வி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’.. முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்' உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு, படத்தைத் தொடங்கி வைத்தார். படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி மற்றும் சேத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கமல் பிரகாஷ் இயக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாக கிங்ஸ்டன் உருவாகி வருவதாக சொலப்படுகிறது. இந்த படத்தை ஜி வி பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து கிராபிக்ஸ் மற்றும் வி எஃப் எக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்த் தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு கப்பலின் மேல் ஜி வி பிரகாஷ் நிற்பது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகிறது. இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.