வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:16 IST)

“இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றியது இமெயில்”- கே.பாக்யராஜ் கூறிய புதிய தகவல்!

Email Movie
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார்.


 
இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.  இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பல இன்னும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, “சிறு பட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயாரிப்பாளர் ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும் கூட அவ்வப்போது இதுபற்றி கூறி வருகிறேன். ஒரு வளாகத்தில் நான்கு திரையரங்குகள் இருந்தால் அதில் ஒன்றை கட்டாயம் சிறுபட வெளியீட்டுக்காக கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும். நிறைய திரையரங்குகள் கொடுத்தால் தானே மக்கள் வந்து படத்தை பார்த்து பாராட்டுவார்கள். இந்த படத்தின் நாயகன் அசோக் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ரொம்பவே கொடுத்து வைத்தவர்.

படத்தில் அவரது காட்சிகளை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக நடித்துள்ளார்.

படம் முடியும்போது இந்த படத்தின் தயாரிப்பாளரை தனிமரமாக விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். கட்டாயம் சோதனைகள் வரும். சோதனை வந்தால் தான் நல்லது. அதையெல்லாம் தாண்டி தான் சந்தோசத்தை அனுபவிக்க முடியும். இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில் தான் எழுதி அனுப்பி கொண்டிருந்தோம்.

இமெயில் வந்த பிறகு பேப்பரின் தேவை குறைந்து விட்டது. அதனால் மரங்களை வெட்டுவதும் குறைந்து இயற்கையும் பாதுகாக்கப்பட்டது.

 
அதுமட்டுமல்ல நிறைய இளைஞர்கள் செருப்படியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல லவ் லெட்டர் கொடுத்து, அந்தப் பெண் உடனே கோபமாகி செருப்பை கழட்டுவார். இந்த இமெயில் வந்தவுடன் அந்த அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு மட்டுமல்ல.. சில பெரிய மனிதர்களிடம் கூட தடுமாற்றம், பயம் காரணமாக நாம் சொல்ல முடியாத விஷயங்களை சொல்வதற்கு இந்த இமெயில் உதவுகிறது.

ஆன்லைனில் தான் மோசடி நடக்கிறது என்றில்லை. ராஜன் சார் சொன்னது போல படப்பிடிப்பு நடித்த அனுமதி வாங்கி சென்றாலும் அந்த இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்பார்கள்.. அங்கே ஒரு தனி யூனியன் வைத்திருப்பார்கள்.. அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள்.

அந்த மாதிரி கண்ணுக்கு தெரிந்து நிறைய மோசடிகள் நாட்டில் நடக்கிறது. தனி மனிதனாக பார்த்து திருந்தினால் மட்டுமே போன்ற மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும்” என்று கூறினார். இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

 
அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.