செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2024 (13:23 IST)

ஆம்ஸ்ட்ராங்க் கொலை! சாதிய வெச்சு லாபம் பாக்க துடிக்கிறாங்க! - யாரை தாக்குகிறார் பேரரசு?

Perarasu

சமீபமாக சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெரும் பரபரப்பு எழுந்துள்ள நிலையில், அந்த கொலையை வைத்து சிலர் சாதிய ரீதியாக லாபம் பார்க்க துடிப்பதாக இயக்குனர் பேரரசு விமர்சித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பலூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பல ரவுடிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நேற்று மாலை சென்னையில் இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் பேரணியும் நடைபெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரபல இயக்குனர் பேரரசு, ”ஒருவர் கொலை செய்யப்பட்டால் அதற்கான காரணம் என்ன? பின்னணி என்ன? என்பதை ஆராய்வதை விட அதை அரசியல் கொலையாகவும் சாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலரும் துடிக்கின்றனர். அனுதாபம் காட்டுவதை விட சுயலாபம் பார்க்கவே பலர் துடிக்கின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், ஒரு கட்சி இன்னொரு கட்சியை பழி சொல்வது. இறந்தவர் மீது சாதி வளையம் வைத்து சாதிய கொலையாக மாற்ற துடிப்பது சமூகத்திற்கு ஆரோக்கியம் கிடையாது. கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதை நோக்கிதான் அனைவரும் நகர வேண்டும். சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உண்டாக்கும். எல்லாவற்றிற்கும் சாதியை முன்னிறுத்துவது நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K