என்னுள் இருந்த இன்னொரு ரஜினியை காட்டியவர் மகேந்திரன்! ரஜினி புகழாஞ்சலி!
என்னுள் இருந்த இன்னொரு ரஜினியை காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் என அவரது உடலுக்கு அஞ்சலி செய்தபின் ரஜினி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றின் மிகச் சிறந்த இயக்குனராக கருதப்படும் மகேந்திரன் இன்று (ஏப்ரில் 2) காலமாகியுள்ளார். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது,
எனக்கு மிகவும் பிடித்த மற்றும் என் நெருங்கிய நண்பரான இயக்குநர் மகேந்திரன் சினிமாவைத் தாண்டி ஒரு நல்ல நண்பர் எங்களது நட்பு மிகவும் ஆழமானது. இயக்குனர் மகேந்திரன் தான் எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருக்கிறார் என்பதை எனக்கு காட்டினார்.
'முள்ளும் மலரும்' படத்தை பார்த்துவிட்டு, உன்னை நடிகராக அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்' என என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த மறைந்த இயக்குனர் பாலசந்தர் தெரிவித்து கடிதம் எழுதினார். அதற்கு காரணம் மகேந்திரன்.
தற்போது வளர்ந்து வரும் இயக்குநர்கள் கூட ரோல் மாடலாக என்னும் இயக்குனர் மகேந்திரன் சாருக்கென்று தமிழ் சினிமா இருக்கும்வரை ஒரு தனி இடம் இருக்கும். அவரது ஆன்மா சாந்திடைய வேண்டுகிறேன் என ரஜினிகாந்த் கூறினார் .