திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (10:18 IST)

வள்ளலாரைப் போல நம்மிடையே திகழ்ந்தவர் விஜயகாந்த்… இயக்குனர் அமீர் வெளியிட்ட அறிக்கை!

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில் விஜயகாந்த் உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்நிலையில் திரையுலகில் விஜயகாந்துக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டுமென சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “திரையுலகின் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன். வாடிய பயிரை, பசியினால் இளைத்தோரை, பிணியால் வருந்துவோரை ஏழைகளாய் உழல்வோரை கண்டு உளம் பதைத்த வள்ளலாரைப் போல நம்மிடையே திகழ்ந்த தன்னலமற்ற மனிதநேயப் பண்பாளரான அவர், "இலனென்றும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள" எனும் குறள் வழி வாழ்ந்த ஈகைத் தமிழன் - கேப்டன் விரைவில் உடல் நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன்” என விஜயகாந்தை பற்றி நெகிழ்ந்துள்ளார்.