படப்பிடிப்பை நிறைவு செய்த டிமாண்டி காலணி 2..!
தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிமாண்ட் உச்சத்தில் இருந்தபோது வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் டிமாண்ட்டி காலணி. இந்த படத்தில் அருள்நிதி, சனத் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளாகவே படமாக்கி முடிக்கப்பட்டு வெளியான இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது.
இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் அருள்நிதி நடிக்க, அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, தயாரிக்கிறார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 61 நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.