வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (13:20 IST)

வேட்டையன் படத்துக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு… வழக்கு ஒத்திவைப்பு!

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கி, லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள  "வேட்டையன்"  திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்தபடத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கை பழனிவேலு என்பவர் தொடுத்திருந்தார். படத்தில் என்கவுண்ட்டரை  ஆதரிப்பது போன்ற கருத்துகளை கதாநாயகனான ரஜினிகாந்த் பேசுகிறார். என்கவுன்டர் வசனங்களை நீக்கும் வரை படத்தைத் தடை செய்யவேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் படத்துக்குத் தடைவிதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுத்துள்ளது. மேலும் இது சம்மந்தமாக விளக்கமளிக்க தணிக்கை வாரியம், லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தமிழக அரசு ஆகியவர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.