1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (07:09 IST)

குணா படத்தை ரி ரிலீஸ் செய்ய உயர்நீதிமன்றம் தடை… என்ன காரணம்?

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருந்தனர்.

இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக படத்தில் இடம்பெற்றிருந்த குணா படத்தில் இடம்பெற்ற“கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடல் அமைந்தது. படத்தின் உச்சகட்ட காட்சியில் அந்த பாடலை மிகச்சரியாக பொறுத்தி ரசிகர்களை மயிர்கூச்செறிய செய்திருந்தார் இயக்குனர்.

அதனால் அந்த பாடல் மற்றும் குணா திரைப்படம் தற்போதைய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கவனம் பெற்றது. இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதி இந்த படத்தை ரி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏனோ அந்த தேதியில் படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் குணா படத்தை ரி ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதில் குணா படத்தின் பதிப்புரிமையை தான் வாங்கியுள்ளதாகவும், அதனால் இந்த படத்தை பிரமீட் மற்றும் எவர்க்ரீன் நிறுவனங்கள் ரி ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குணா படத்தை ரிலீஸ் செய்ய ஜூலை 20 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து, இது சம்மந்தமாக விளக்கமளிக்க சம்மந்தப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.