1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (07:54 IST)

சுபாஷுக்கு பிஸ்கட்டை வைத்து மேக்கப் போட்டோம்… மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 200  கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மும்பையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப் பட்டு வருகிறது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை மஞ்ஞும்மள் பாய்ஸ் நிகழ்த்தியுள்ளது.  தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் சிதம்பரம் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். படத்தில் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநாத் குகைக்குள் விழுந்துவிட அவர் உடலில் சேரும் சகதியும் ஒட்டிக்கொள்ளும். அதற்காக அவருக்கு மேக்கப் போட ஓரியோ டார்க் பிஸ்கட்களை பயன்படுத்தியதாக சிதம்பரம் கூறியுள்ளார். பிஸ்கட்களை அவர் மேல் தடவியதால் அவரை எறும்புகள் கடிக்க ஆரம்பித்ததாகவும், அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவர் நடித்ததாகவும் கூறியுள்ளார்.