வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (09:08 IST)

ஒரு பைசா கூட தரமாட்டேன்… லைகர் விநியோகஸ்தர்களை எச்சரித்த பூரி ஜெகன்னாத்!

லைகர் படத்தின் எதிர்பாராத தோல்வியால் அந்த படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரிலீஸூக்குப் பிறகு படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

இதனால் விநியோகஸ்தர்கள் தங்கள் நஷ்டத்தைத் திருப்பிக் கேட்க, தயாரிப்பாளரும் இயக்குனருமான புரி ஜெகன்னாத் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க சம்மதித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாகவே விநியோகஸ்தர்கள் அவர் வீட்டு முன்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோவில் “போராட்டம் ஏதாவது செய்தால் என்னிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்க முடியாது. நான் பணத்தைத் தருவதாகவும், அதற்காக ஒரு மாதம் அவகாசம் கேட்டும் உள்ளேன். ஆனால் இப்படி என்னை ப்ளாக்மெயில் செய்தால் நான் ஏன் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக பூரி ஜெகன்னாத் லைகர் தோல்வி பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியபோத் “என்னால் லைகர் தோல்வியை நினைத்துக் கொண்டு அழுதுகொண்டே இருக்க முடியாது. நான் மூன்று வருடங்கள் அந்த படத்தில் வேலை பார்த்தேன். இப்போது நினைத்துப் பார்க்கும் போது அதிக நாட்கள் மகிழ்ச்சியாகதான் இருந்தேன். அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டேன். என்னிடம் இருந்து ரசிகர்களை மகிழ்விக்கும் படம் வரும் என்று உங்களிடம் கூறிக்கொள்கிறேன்” எனக் கூறி இருந்தார்.