செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (19:05 IST)

மி டு வில் சிக்கிய இயக்குனரோடு இளையராஜா பணிபுரிவதா? சின்மயி ஆதங்கம்!

இளையராஜா சுசிகணேசனின் புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருப்பது குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளரான சுசிகணேசன் பைவ் ஸ்டார் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய திருட்டு பயலே திரைப்படம் அவருக்கு கவனத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பின்னர் இயக்கிய கந்தசாமி உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் அவர் மீது கவிஞரும் சுயாதீனப் பட இயக்குனருமான லீனா மணிமேகலை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை வைத்தார். அந்த குற்றச்சாட்டை மறுத்து லீனாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்த சுசிகணேசன், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிகு பிறகு அவர்  வஞ்சம் தீர்த்தாயடா என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை இயக்குனர் சுசி கணேசன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த டிவீட்டைப் பகிர்ந்த பாடகி சின்மயி ‘ வஞ்சம் தீர்த்தாயடா… வாவ். அதைதான் அந்த இயக்குனர் லீனாவுக்கு செய்து வருகிறார். இளையராஜா சாருக்கோ அல்லது அவரது குழுவினருக்கோ அவர்கள் ஒரு பாலியல் வன்கொடுமையாளருடன் பணிபுரிகிறோம் என்று தெரியாதா?’ என்று டிவீட் செய்துள்ளார். மி டு இயக்கம் தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டதற்கு பாடகி சின்மயியும் ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாடலாசிரியர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார்.