செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (10:57 IST)

நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்: ஜோதிகா பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை!

பிரபல மலையாள தயாரிப்பாளர் வீட்டுக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஜோதிகா பட இயக்குநர் மீது போலீசில்  புகார் கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து கேரள தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு தடைவிதித்துள்ளது. 
 

 
மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ரோஷன் ஆன்ட்ரூஸ். மலையாளத்தில் வெளிவந்த உதயனாணுதாரம், ஹவ் ஓல்ட் ஆர் யு, காயங்குளம் கொச்சுண்ணி, மும்பை போலீஸ் உள்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள அவர் தமிழிலும் ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
 
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி வீட்டுக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியதாக, எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் கூறப்பட்டது.
 
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ரோஷன் ஆன்ட்ரூஸ் , ’தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகன் ஜான் ஆண்டனி என்னிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவருக்கு போதை பழக்கம் இருந்ததால் அவரை நீக்கி விட்டேன். அதனை மனதில் வைத்துக்கொண்டு என்மீது இப்படி குற்றங்களை சுமத்தி பொய் தகவல்களை பரப்பி வந்தார். இதை  கேட்பதற்காக நானும், எனது நண்பர் நவாசும் அவர் வீட்டுக்கு சென்றோம். அப்போது ஆல்வின் ஜான் ஆண்டனி, அவரது தந்தை மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து என்னையும், நவாசையும் தாக்கினர். இதில் நவாசுக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன்’ என்றார்.
 

 
இதுகுறித்து ஜான் ஆண்டனி கூறும்போது, நான் போதைப் பொருள் பயன்படுத்துவதாக அவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கும் ரோஷன் ஆன்ட்ரூஸ்க்கும் பொதுவான பெண் நண்பர் உண்டு. அவர்களுடன் நான் பழகுவது அவருக்கு பிக்காததால் என்னை வேலையில் இருந்து நீக்கியதுமட்டுமல்லாமல் என் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளார். ஆகவே இது குறித்து எர்ணாகுளம் தெற்கு  போலீசில் புகார் செய்துள்ளோம் என அவர் கூறினார். 
 

 
கேரளாவில் பிரபல இயக்குநர் - தயாரிப்பாளர் இடையேயான  இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து மலையாள தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் நேற்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ராவிடம் ரோஷன் ஆன்ட்ரூஸ் மீது புகார் அளித்துள்ளனர்.