ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (16:25 IST)

சென்னை மக்களின் மறக்க முடியாத தியேட்டர் மூடப்படுகிறதா? ரசிகர்கள் வருத்தம்

சென்னை மக்களின் குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் தியேட்டராக இருந்து வந்த ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்படுவதாக வெளி வந்துள்ள தகவல் சினிமா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
சென்னையின் மத்திய பகுதியான வடபழனியில், ஏவிஎம் ஸ்டுடியோ அருகிலேயே இருக்கும் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர், கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பழமை மாறாமல் இருக்கும் இந்த தியேட்டரில் குறைந்த கட்டணங்கள், விலை குறைந்த உணவு பண்டங்கள் என இருந்ததால் நடுத்தரவர்க்க மக்களின் விருப்பத்திற்குரிய தியேட்டராக இருந்து வந்தது
 
எந்த ஒரு புதிய திரைப்படம் என்றாலும் அந்த படங்களை ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணங்களை செலுத்தி இந்த தியேட்டரில் கண்டு ரசித்தனர். மற்ற தியேட்டர்களில் ரூபாய் 200 வரை டிக்கெட் விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இங்கு மட்டும்தான் ரூபாய் 50, 60 என டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கடந்த மார்ச் மாதமே இந்த திரையரங்கை கூட அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கை நிரந்தரமாக மூட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் மட்டுமன்றி கொரோனா பாதிப்பு இன்னும் நீடிக்குமானால் தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களுக்கு இதே நிலைமை தான் என்பது குறிப்பிடத்தக்கது