அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்பு எப்போது?.. வெளியான தகவல்!
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.
இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் தற்போதைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அந்த படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் அட்லியின் சம்பளம்தான் என்றும் சொல்லப்பட்டது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் இந்த படம் கைமாறியது. இந்நிலையில் தற்போது இந்த படம் உறுதியாகிவிட்டதாகவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் அல்லு அர்ஜுன் திரையுலகிற்கு அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் விதமாகவும் இந்த அறிவிப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.