செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (10:20 IST)

சிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா ?

சமீபகாலமாக ரசிகர்களோடோ அல்லது ஊடகங்களோடோ எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்த அஜித் நேற்று தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை மூலம் அறிவுரைக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டு உச்ச நட்சத்திரங்களின் ராஜ்ஜியம்தான் நடந்து வரும். அதில் ஒரு நடிகர் எடுக்கும் முடிவு மற்றவரை மறைமுகமாக பாதிக்கும். உதாரணமாக எம்.ஜி.ஆர் அரசியலில் ஆர்வம் கொண்டு திமுக வில் இணைந்து பணியாற்றினார். இதனால் அவரது சக நடிகரான சிவாஜி காங்கிரஸ் பக்கம் செல்ல வேண்டிய சூழல் உருவானது. ஆனால் இயல்பிலேயே சிவாஜிக்கு எம்.ஜி.ஆர். அளவுக்கு ஆர்வம் இல்லை என்பது சிவாஜியின் கடைசிக் கால சம்பவங்களே சான்று.

ரஜினி கமல் விஷயத்திலும் இதேதான் நடந்தது. ரஜினி அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தாலும் வரலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்தார். இதனாலேயே ஊடகங்களும் ரசிகர்களும் கமலை அரசியலை நோக்கித் தள்ளும் செயல்களில் ஈடுபட்டனர், கமலும் கட்சி தொடங்கிவிட்டார். இந்த நடிகர்களின் அரசியல் ஆர்வத்திற்கு ஊடகங்களும் ஒரு முக்கியக் காரணம்.

அதுபோல தற்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான விஜய் அரசியலில் ஆர்வம் கொண்டு தனது படங்களில் அரசியல் பேசி வருகிறார். அந்த அழுத்தம்  சில நேரம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாக அஜித்தைப் பாதித்து வருகிறது. சிலப் பல வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் சிலர் அதிமுக வில் இணைய ஆர்வம் காட்டி அதற்கு மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதாக அறிந்த ஆஜித் மன்றங்களை உடனடியாகக் கலைத்தார்.

அதன் பின்னர் அஜித்தின் அரசியல் வருகை குறித்து எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் போது திடீரென அஜித் அதிமுக வில் சேர்ந்து கட்சியைக் கைப்பற்றப்போகிறார் என ஒரு செய்தி உலாவந்தது. ஜெயலலிதா சமாதிக்கு மாலையிட்டு விட்டு வெளிநாட்டுப் படப்பிடிப்புக்கு உடனடியாக சென்றார் அஜித். இப்படி தன் மீதான அரசியல் சாயம் பூசப்பட இருக்கும் ஒவ்வொரு முறையும் அதை சாதூர்யமாக கடந்து விடுபவர் அஜித்.

அதேப்போலதான் இம்முறையும் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணையும் போது அங்கு அஜித்தின் படங்களை உபயோகித்துள்ளனர். அந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் ‘ திரை நடிகர்களிலே அஜித் மிகவும் நேர்மையானவர். அதைப்போல அஜித் ரசிகர்களும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்’ எனக் கூறினார்.

இதனால் ரஜினியின் ஆதரவைப் பெற முடியாத பாஜக இப்போது அஜித்தை வளைக்கப்பார்க்கிறது என நேற்று முழுவதும் சமூக வலைதளங்கள் பற்றி எரிந்தன. அதனால் அஜித் தரப்பில் இருந்து உடனடியாக நேற்று அறிக்கை வெளியாகி ரசிகர்களுக்குத் தெளிவை வழங்கியுள்லது. இந்த அறிக்கை மூலம் அஜித் தனக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை என்பதை தெளிவாக விளக்கிவிட்டார்.

இன்னும் ஒரு சிலரின் பார்வையோ அஜித் தன் மீது பாஜக ஆதரவாளன் என்ற எந்த சாயலும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால்தான் இவ்வளவு விரைவாக அறிக்கை வந்திருக்கிறது எனக் கூறியுள்ளனர்.