'காலா'வை அடுத்து 'விஸ்வரூபம் 2' படத்திற்கும் ஆப்பு வைத்த கர்நாடகா
காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு தலையிடாது என்று முதல்வர் குமாரசாமியும் கூறிவிட்டதால் கர்நாடகாவில் 'காலா' வெளியாக வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியை போலவே கமல்ஹாசனும் காவிரி மேலாண்மை அமைப்பது ஒன்றே இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கர்நாடகா மாநிலத்திற்கு எதிரான கருத்தை வலியுறுத்தியதால் அவருடைய படத்தையும் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் கூறியுள்ளார். ரஜினி, கமல் படங்களை தவிர, பிற படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சாரா கோவிந்த் கூறியுள்ளதால் 'விஸ்வரூபம் 2' படமும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சரத்குமார், விஷால், சத்யராஜ் உள்பட பல கோலிவுட் திரையுலகினர்களும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கருத்துக்களை தெரிவித்தார்கள். ஆனால் கமல், ரஜினியை படங்களை மட்டுமே தடை செய்வோம் என கர்நாடக வர்த்தக சபை கூறியுள்ளது உள்நோக்கம் கொண்டது என்று நடுநிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.