எம்ஜிஆர் காலம் வேறு.. இன்றைய காலம் வேறு – விஜய் அரசியல் வருகை குறித்து பிரகாஷ் ராஜ்!
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார்.
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிப்பின் போது கூட ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைக்காததற்கு கடுமையான விமர்சனங்களை வைத்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் “விஜய் அரசியலுக்கு வந்தாலும் நான் கேள்வி கேட்பேன். அவரை வரவேற்பதில் எனக்கு தயக்கம் இல்லை. அவரை ஏற்பது மக்களின் கையில் தான் உள்ளது. எம்ஜிஆர் மற்றும் என்டிஆர் அரசியலுக்கு வந்த காலம் வேறு, இன்றைய காலம் வேறு. சினிமா பிரபல்யம் அரசியலுக்கு உதவாது. நீ எதை எதிர்த்து எதை மாற்றாக கொண்டு வர விரும்புகிறாய் என்பதைப் பொறுத்தே மக்கள் வாக்களிப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.