நடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
தெலுங்கு சினிமா துறை பவர் ஸ்டார் பவன் கல்யாண், முழு நேர அரசியலில் குதித்துள்ள தனக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு பட உலகில் முன்னனி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். அவருக்கு வயது 46. தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர். பவர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் பவன் கல்யாண், பன்முகத் திறமை கொண்டவர். இவர் நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல துறைகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த அஞ்ஞானவாசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன சேனா என்ற அரசியல் கட்சியை 2014 ஆம் ஆண்டு தொடங்கினார் பவன் கல்யாண். இப்போது முழு நேர அரசியலில் குதித்துவிட்டார். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் தன் கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், சில மர்ம நபர்கள், காரில் விபத்தை ஏற்படுத்தி அல்லது குண்டு வைத்து கொலை செய்துவிடுவோம் என செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார். மேலும் கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்லை என்று தெளிவாக கூறியுள்ளார்.