நடிப்புதான் என் வாழ்க்கையே.... புது அவதாரம் எடுத்த ராணா டகுபதி

VM| Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (10:59 IST)
பாகுபலி படம் உலக சினிமா ரசிகர்களை தன்வசம் ஈர்த்த ராணா டகுபதி அமர்சித்ர கதா நிறுவனத்துடன் கைகோர்த்து புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். 
காமிக்ஸ் உலகில் கோலோச்சிய அமர்சித்ர கதா நிறுவனம் புதுப்பொலிவுடன் ஏசிகே அலைவ் (ACK Alive) என்ற பெயரில் புதுவடிவம் பெற்றிருக்கிறது. காமிக்ஸ் மட்டுமல்லாது நிகழ்த்து கலைகள், அறிவியல் உள்ளிட்டவைகள் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தை இன்றைய இளைய சமுதாயத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த நிறுவனம் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான கிஷோர் பியானியுடன் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராக இணைந்திருக்கிறார் நடிகர் ராணா டகுபதி. 
 
கடந்த 2010ல் வெளியான லீடர் தெலுங்குப் படம் மூலம் நடிகராக அறிமுகமான ராணா, அடுத்தடுத்து தொட்ட உயரங்கள் பெரிது. தெலுங்கு, தமிழ் படங்களைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார். தற்போது ஏசிகே அலைவ் மூலம் பிசினஸ் மேன் அவதாரம் எடுத்திருக்கிறார். 
 
இதுகுறித்து பேசிய ராணா, நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இன்று நான் என்னவாக இருக்கிறோனோ அதற்கு நடிப்பும் ஒரு காரணம். 17 வயதில் எனது கேரியரைத் தொடங்கினேன். இன்றுவரை நடிப்புக்காக எனது முழு அர்ப்பணிப்பையும் அளித்து வருகிறேன். ஒரு கதை சொல்லியாக இருக்கவே நான் விரும்புகிறேன். நான் நடிக்கும் படங்கள் மூலம் கதை சொல்லியாக இருந்து வருகிறேன்.
 
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பிசினஸ் மேன் என எனது ஒவ்வொரு ரோலையும் சிறப்பாகச் செய்யவே முயன்று வருகிறேன். அமர் சித்ர கதா நிறுவனத்தில் இயக்குநராக இணைந்திருக்கிறேன். நாம் சிறுவயதில் வளரும்போது என்ன அனுபவித்தோமோ அதை இன்றைய இளைய தலைமுறைக்கும் கொடுக்கும் நோக்கில் எனது இந்தப் பயணம் அமையும் என்று ராணா மனம் திறந்திருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :