விவாகரத்து வதந்திகளுக்கு மறைமுகமாகப் பதிலளித்த அபிஷேக் பச்சன்!
உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் அதை தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதேசமயம் விவேக் ஓபராய், சல்மான் கான் உள்ளிட்டோருடனான காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். பின்னர் கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகளும் உள்ளார். நல்லவிதமாக சென்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வந்த அவரின் பிறந்தநாளைக் கூட பச்சன் குடும்பம் கொண்டாடவில்லை.
இந்நிலையில் அபிஷேக் பச்சன் நடித்துள்ள படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவரிடம் அவர் பற்றி வரும் நெகட்டிவ் செய்திகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு “நான் மிகவும் நேர்மறையான ஆள். என்னால் எதிர்மறையாக இருக்க முடியாது. அது போல என்னால் நெகட்டிவிட்டியுடன் வாழவும் முடியாது. என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நான் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். என் வாழ்க்கையை நான் இழந்துவிடுவேன். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது” எனக் கூறியுள்ளார்.