வெள்ளைக்காரனுக்கு எதிராக மீசையை முறுக்கிய மாவீரன் – சந்திரசேகர் ஆஸாத்

azad
இந்திய சுதந்திர போராட்டம் என்றதுமே பல வீரர்கள் நம் நினைவுக்கு வருவார்கள். அவர்களில் முக்கியமானவர் பகத் சிங். அந்த பகத் சிங்கிற்கே ஒரு வீரன் மிகப்பெரும் முன்மாதிரியாக விளங்கினார். வெள்ளையர்கள் அவர் பேரை கேட்டாலே பதட்டம் அடையும் அளவுக்கு அவரது போராட்டம் இருந்தது. அவர்தான் சந்திரசேகர் ஆஸாத். அவரது 113வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும்  கொண்டாடப்படுகிறது.

ஜூலை 23ம் தேதி 1906ல் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் சந்திரசேகர் ஆஸாத். அப்போது அவருடைய இயற்பெயர் சந்திரசேகர் திவாரி. இவருடைய அப்பா சீதாராம் திவாரி இவரை சமஸ்கிருதம் பயில சொல்லி பனாரஸில் உள்ள காசி வித்யாபீடத்தில் சேர்த்தார். ஆனால் சந்திரசேகரின் ஆர்வம் சம்ஸ்கிருதத்தை விட சுதந்திர போராட்டத்தில் அதிகமாக இருந்தது.

1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிறகு இந்தியாவில் சுதந்திர போராட்ட எழுச்சி மக்களிடையே பரவலாக ஆரம்பித்தது. 1921 டிசம்பர் மாதம் காந்தி வெள்ளையர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். வெள்ளையர்கள் இறக்குமதி செய்யும் சீமை ஆடைகள், பொருட்களை தவிர்த்து உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பல இடங்களில் அன்னிய துணிகள் பொது இடத்தில் குவித்து கொளுத்தப்பட்டன. அப்போது சந்திரசேகருக்கு 15 வயது. பனாரஸில் படித்து கொண்டிருந்தவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து போராடியதால் கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் அவரது பெயரை கேட்கும்போது “ஆஸாத்” என்று பதிவு செய்தார். ஆஸாத் என்றால் ”சுதந்திரம்” என்று பொருள். அதற்கு பிறகே சந்திரசேகர் திவாரி என்ற பெயரை மாற்றி சந்திரசேகர் ஆஸாத்-ஆக மாறினார்.

azad

1922ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் கலைக்கப்பட்டது. சந்திரசேகர் மனம் வெறுத்தார். ஒருகட்டத்தில் அகிம்சை வழியில் போராடுவது சரியான வழி அல்ல என்று முடிவெடுத்தவர் தீவிரவாதத்தை கையில் எடுத்தார். அப்போது ஹிந்துஸ்தான் ஜனநாயக சங்கத்தின் உறுப்பினர் மன்மத் நாத் குப்தாவும், ராம் பிரசாத் பிஸ்மிலும் அவருக்கு பழக்கமானார்கள். அவர்களோடே சங்கத்தில் இணைந்த சந்திரசேகர் பல இடங்களில் சங்கத்துக்காக நிதி திரட்டினார்.

ஒரு புரட்சிகரமான நடவடிக்கையே அவர்களது திட்டமாக இருந்தது. அதற்கு நிறைய நிதி தேவைப்படும் என்பதால் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். 1925ம் ஆண்டு லக்னோ செல்லும் ககோரி விரைவு ரயிலை கொள்ளையடித்தனர். அப்போதே வெள்ளையர்களின் முக்கிய எதிரியாக சந்திரசேகர் ஆஸாத் மாறிப்போனார்.

1928ல் சைமன் குழு இந்தியா வந்தது. இந்தியாவில் வெள்ளை அதிகாரிகளின் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்வதற்காக அந்த குழு வந்தது. அப்போது “பஞ்சாப் சிங்கம்” லாலா லஜபதி ராய் தலைமையில் “சைமன் குழுவே திரும்பி போ” என்ற பாதாதைகளோடு ஒரு குழுவினர் மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது நடந்த தாக்குதலில் லஜபதிராய் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் தொடுத்த ஜெனரல் ஸ்காட்டை கொல்ல திட்டமிட்டனர்.

அப்போதுதான் ஒரு புதிய இளைஞன் அந்த குழுவில் இணைந்தான். கம்பீரமான அவனது தோற்றமும், பேச்சும் சந்திரசேகர் ஆஸாதை கவர்ந்தன. அந்த வீரர்தான் மாவீரன் பகத் சிங். 1928 டிசம்பர் 17ம் தேதி ஸ்காட்டை கொல்லும் திட்டத்தில் லாகூர் தலைமை காவல் கட்டிடத்தில் புகுந்த ஆஸாதின் படை தவறுதலாக ஜான் சாண்டர்ஸ் என்ற அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடினர்.

azad

அதற்கு பிறகு ஆஸாத், பகத் சிங், சுகதேவ் இன்னும் பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களை பிடிக்க கிராமங்கள்தோறும் தேடுதல் வேட்டை தொடங்கியது. ஹிந்துஸ்தான் ஜனநாயக சங்கத்தின் வீரர்கள் உடனடியாக கலைந்து பல இடங்களுக்கு சென்று தலைமறைவாகினர். அதற்கு பிறகு 1929 ல் வெள்ளையர்களின் சட்டசபையில் வெடிக்குண்டுகளை வீசியதற்காக பகத் சிங், சுகதேவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கலைந்து போன சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்று திரட்ட ஆஸாத் முயற்சித்தார். அதுபற்றி கலந்தாலோசிக்க அஹமதாபாத்தில் உள்ள ஆல்ஃப்ரட் பூங்காவுக்கு வரும்படி முக்கிய உறுப்பினர்களுக்கு செய்தி அனுப்பினார். ஆனால் அவருடைய இயக்கத்துக்குள் இருந்தபடியே உளவு வேலை பார்த்த வீர்பத்ர திவாரி என்பவன் இந்த செய்தியை வெள்ளையர்களிடம் தெரிவித்துவிட்டான். ஆஸாதை பார்க்க சுகதேவ் ராஜ் வந்த சமயம் பூங்காவை சுற்றியிருந்த போலீஸார் ஆஸாதை சுட தொடங்கினர்.

azad

வெள்ளையர்களை கண்டு அஞ்சாத ஆஸாத் சுகதேவ் ராஜை தப்பி போக சொல்லிவிட்டு தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு தாக்க தொடங்கினார். அவர் சுட்டத்தில் மூன்று போலீஸார் இறந்தனர். உடலின் பல இடங்களில் குண்டு பாய்ந்தும் தன் மீசையை முறுக்கியபடியே அந்த பூங்காவில் வீர மரணம் அடைந்தார் சந்திரசேகர் ஆஸாத்.

நாட்டிற்காக தன் உயிரையும் கொடுத்த அந்த வீரர் அவருக்கு பிறகு அவருடைய புரட்சியை தொடங்க மேலும் பலர் வருவார்கள் என்ற நம்பிக்கையோடே மரணித்தார். அவர் இறந்த அந்த பூங்கா ஆஸாத் பூங்கா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அவருக்கு அங்கு ஒரு நினைவு ஸ்தூபியையும் வைத்து மக்கள் பாதுகாத்து வருகிறார்கள். அவர் உபயோகித்த துப்பாக்கி இன்றும் அலகாபாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்போதும்கூட அவருக்காக அமைக்கப்படும் நினைவு சிலைகளில் கூட கம்பீரமாக மீசையை முறுக்கியபடி சுதந்திர இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆஸாத்.இதில் மேலும் படிக்கவும் :