செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2017 (17:55 IST)

கபாலி முதல் சி 3 வரை நஷ்டம்தான் - விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் 7 பேருக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் ரெட் போட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது.  ரஜினி நடித்த கபாலி, கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த கத்தி சண்டை, தனுஷ் நடித்த கொடி, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய் நடித்த பைரவா, சூர்யா நடித்த சி3 ஆகியவைதான் அந்த நடிகர்களும், படங்களும். இந்தப் பிரச்சனையின் பின்னணி என்ன என்பது குறித்து விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டியளித்தார். அவர் கூறியவை...

 
மனசாட்சியுடன் சொல்லுங்கள்
 
கபாலி முதல் சிங்கம் 3 வரை வெளிவந்த முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியடைந்ததாக  விளம்பரம் செய்திருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியடைந்ததா என்பதை அவர்கள் மனசாட்சியுடன் சொல்லவேண்டும். நீங்கள் விளம்பரத்தின் மூலமாக பொதுமக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால்,  திரைத்துறையில் இருக்கிறவர்களுக்கு விநியோகஸ்தர்கள் யாரும் இந்த படங்களால் ஒன்றுமே சம்பாதிக்கவில்லை என்பது  தெரியும். அப்படியிருக்கும்போது, நீங்கள் எதை வைத்து வெற்றி என்று குறிப்பிடுகிறீர்கள். ஒரு படத்தின் வெற்றிவிழாவை படம் வெளியான 2-வது நாளே கொண்டாடுகிறீர்கள். எதை வைத்து வெற்றிவிழா கொண்டாடுகிறீர்கள்.
 
மரணப் படுக்கையில் திரைத்துறை
 
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் கடைபிடித்த நடைமுறையை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா? அந்த காலத்தில் விநியோகஸ்தர்கள் முதற்கொண்டு லாபம் அடைந்தார்கள். விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்ததால்தான் 50 ஆண்டு காலமாக திரைத்துறை உயிரோடு இருந்தது. ஆனால், இந்த கடைசி 10 ஆண்டுகளில் தமிழ் சினிமா மரணப் படுக்கைக்கு சென்றுவிட்டது. இதற்கு  காரணம் நடிகர்கள்தான்.
 
காரை விற்கிறார்கள்
 
வெற்றிவிழாவை கொண்டாடும் நடிகர்கள் விநியோகஸ்தர்களை அழைத்து அவர்களுடைய படத்திற்கு லாபம் கிடைத்ததா என்று  கேட்டுவிட்டு அதை கொண்டாடியிருந்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம். ஒரு நடிகர் அவருடைய படம் வெற்றியடைந்ததற்கு  அனைவருக்கும் தங்க சங்கிலி கொடுக்கிறார். மற்றொரு நடிகர் இயக்குனருக்கு கார் பரிசளிக்கிறார். ஆனால், அந்த படங்களை  வாங்கிய விநியோகஸ்தர் காரை விற்றுக்கொண்டிருக்கிறார்.
 
நீங்க மட்டும் உண்மையானவர்களா?
 
திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பொய் கணக்கு காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்கள் அனைவரும் பொய்யானவர்கள், நீங்கள் மட்டும் உண்மையானவர்களா? நீங்கள்  விநியோகஸ்தர்களிடம் வசூலை பற்றி கேட்கவேண்டியதில்லை. நீங்கள் திரையிட்ட திரையரங்குகளுக்கு சென்று உங்கள்  படத்தின் வசூலை பற்றிக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்லுட்டும் அந்த படத்தின் வசூலை. அதன்பிறகு நீங்கள்  சொல்லுங்கள் அந்த படம் எத்தனை கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது என்று.
 
யாருக்கும் ரெட் கிடையாது
 
நாங்கள் சில நடிகர்களுக்கு ரெட் கார்டு போட்டதாக ஒரு செய்தி உலாவி வருகிறது. நாங்கள் யாருக்கும் ரெட் கார்டு  போடவில்லை. போடவேண்டிய தேவையும் இல்லை. நேற்று நடந்த விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில், மேலேசொன்ன 7 நடிகர்களின் படங்களால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அனைவரும் கடிதம் கொடுத்திருந்தார்கள். அவர்கள் இனிமேல்,  அந்த முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்கள். அந்த நடிகர்களுக்கு ரெட் கார்டு போடவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், சங்கத்தின் சார்பில் யாருக்கும் ரெட் கார்டு கொடுக்கமுடியாது என்று  திட்டவட்டமாக கூறிவிட்டோம்.
 
ரஜினி, விஜய், சூர்யா படங்களை வாங்க மாட்டோம்
 
விநியோகஸ்தர்களாகிய நாங்கள் இனிமேல் அவர்களது படங்களை வாங்கப்போவதில்லை என்று கூறியிருப்பதால், அந்த முன்னணி நடிகர்களே இனிமேல் நேரடியாக படத்தை விநியோகம் செய்யட்டும். அதன்மூலம், அவர்களுடைய படத்தின் வசூலை அவர்களே நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு கூறிக்கொண்டோம்.