சினிமாவில் அதை அனுஷ்கா தான் கற்றுத் தந்தார் - தமன்னா பேட்டி

Sasikala| Last Modified செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:29 IST)
நடிகைகளுக்குள் போட்டி இருக்கிறது என்பதும், பரஸ்பரம் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறார்கள் என்பதும் எப்போதும்  நிலுவையில் உள்ள குற்றச்சாட்டு. ஆனால், இன்றைய இளம் நடிகைகள் அதனை மறுக்கிறார்கள். தமன்னா இது குறித்து அளித்த சுவாரஸிய பேட்டியின் தமிழாக்கம்...

 
நடிகைகளுக்குள் போட்டி இருப்பதாக கூறப்படுகிறதே?
 
கதாநாயகிகள் மத்தியில் போட்டி இருக்கிறது என்றும், ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்டு திரிகிறார்கள் என்றும்  கிசுகிசுக்கள் வருகின்றன. ஒரு நடிகைக்கு வந்த பட வாய்ப்பை இன்னொரு நடிகை தட்டிப்பறிக்கிறார் என்றும் பேசுகிறார்கள். திரைக்கு முன்னால்தான் நடிகைகளை ரசிகர்கள் போட்டியாளர்களாக பார்க்க முடியும். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள்  வாழ்க்கை முறையே வேறு.
 
விளக்கமாக கூற முடியுமா?
 
ஒவ்வொரு நடிகையும் போனில் ஒருவரையொருவர் அக்கறையோடு நலம் விசாரித்துக் கொள்வார்கள். படங்கள் நன்றாக  ஓடினால் அதில் நடித்த நடிகைக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுவார்கள். தோல்வி அடைந்தால் ஆறுதல் சொல்வார்கள்.  கதாநாயகிகள் இடையே நல்ல உறவு இருக்கிறது. யாரையும் போட்டியாக நினைப்பது இல்லை.
 
நீங்கள் இந்த விஷயத்தில் எப்படி?
 
எனக்கு நடிகைகளில் பலர் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். அதில் முதன்மையானவர் அனுஷ்கா. நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் திரையுலகில் யாரையும் தெரியாமல் கஷ்டப்பட்டேன். அப்போது அனுஷ்கா, என்னை விட சீனியர் நடிகையாக இருந்தும் கொஞ்சம் கூட கர்வம் பார்க்காமல் என்னோடு பழகினார். சினிமா உலகம் பற்றியும் இங்கு யாரிடம் எப்படி  நடக்க வேண்டும் என்றும் அவர்தான் எனக்கு சொல்லி கொடுத்தார்.
 
உதாரணம் சொல்ல முடியுமா?
 
நடிகையாக இருப்பவர் ‘காஷ்ட்யூம் டிசைனர்’ ஒருவரை நிரந்தரமாக வைத்துக்கொண்டு ஆடை விஷயங்களில் கவனமாக  இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட எனக்கு இல்லாமல் இருந்தது. அதையும் அனுஷ்காவே சொல்லி கொடுத்தார். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு உதவியாக இருந்தார்.
 
உங்களின் வேறு தோழியர் யார்?
 
நடிகை காஜல் அகர்வாலும் எனக்கு தோழிதான். இருவரும் சினிமாவில் ஒன்றாகவே பயணத்தை ஆரம்பித்து 10 வருடங்களாக  நடித்துக்கொண்டு இருக்கிறோம்.
 
காஜலின் ஸ்பெஷல் என்னவென்று நினைக்கிறீர்கள்?
 
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பிரமாதமாக நடித்து விடும் திறைமைசாலியாக காஜல் அகர்வால் இருக்கிறார்.
 
உங்களுக்குப் பின் வந்த நடிகைகளில் யார் உங்க தோழி?
 
என் பார்வையிலேயே பெரிய கதாநாயகியாக வளர்ந்த சமந்தாவுடனும் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது.
 
அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
அவர் திறமையானவர். புத்திசாலி. சினிமாவில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு திருப்பி கொடுக்கும் நோக்கோடு சமூக சேவை  பணிகள் செய்து வரும் அவரது நல்ல மனதை பாராட்ட வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :