ஓட்டப்பந்தய உசேன் போல்ட்டுக்கு கொரோனாவா? – அவரே அளித்த விளக்கம்!
பிரபலமான ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டப்பந்தயத்தில் 8 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவரான பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் கடந்த 21 ம் தேதி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் க்ரிஸ் கெயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் யாரும் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து உசேன் போல்டுக்கு கொரோனா இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட உசேன் போல்ட் ”எனக்கு கொரோனா இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதால் என்னை நான் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளேன். அதன் முடிவுகள் வெளியாகும் வரை என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் சோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.