வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (15:41 IST)

மிரட்டிய இலங்கைக்கு தோல்வி பயத்தை கொடுத்த இந்தியா

இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலியின் சதம் மற்றும் புவனேஷ்வர் குமாரின் பவுலிங் இலங்கை அணியின் வெற்றி கனவு சிதைந்தது.


 

 
இலங்கை - இந்தியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி தோல்வியடைந்துவிடும் என்றே பலரும் கணித்தனர். 
 
இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் குவித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இலங்கைக்கு அதிர்ச்சியளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் ஆட்டமிழக்க ஒருபக்கம் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 
 
மறுபக்கம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். கோலியின் சதத்தால் இந்திய அணி 352 ரன்கள் குவித்தது. 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
 
இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய அணி ஆரம்பத்திலே அதிர்ச்சியளித்தது. முதல் ஓவரிலே ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
 
அதைத்தொடர்ந்து தற்போது 22 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. கடைசி நாளான இன்று இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. புவனேஷ்வர் குமார் 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.