ஸ்மித்திடம் மன்னிப்புக் கேட்ட கோஹ்லி – நெகிழ்ச்சியான சம்பவம் !

Last Updated: திங்கள், 10 ஜூன் 2019 (12:14 IST)
ரசிகர்களின் கேலி கிண்டலுக்காக ஸ்மித்திடம் தான் மன்னிப்புக் கேட்டதாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணி அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி பேட் செய்த போது ஸ்மித்தை கேலி செய்தனர்.

ஸ்மித் பால் டேம்பரிங்கில் சிக்கி மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்ததில் இருந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்டின் போதும் இதுபோன்ற தேவையற்ற செயலில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டனர். இத்தகைய செயல்களால் ஸ்மித் மனதளவில் பாதிக்கப்பட்டு வருகிறார். நேற்றைய போட்டியில் ரசிகர்களின் கேலியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோஹ்லி ரசிகர்களைப் பார்த்து கேலி செய்யாதீர்கள் என சைகை செய்தார்.

அதன் பின்னர் ஸ்மித்திடம் கைகொடுத்து ஏதோ பேசினார். இது மைதானத்தில் இருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. அதன் பின்னர் ரசிகர்கள் ஸ்மித்தைக் கேலி செய்வதை நிறுத்தினர். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோஹ்லி ‘ எனக்கும் ஸ்மித்துக்கும் இடையில் முன்பு நிறைய நடந்துள்ளது. ஆனால் இப்போது அவர் மீண்டு வந்து போட்டிகளில் கவனம் செலுத்துகிறார். ஆனால் ரசிகர்கள் அவரைக் கேலி செய்து வருகின்றனர். ஐபிஎல்-ல் கூட இதுபோன்ற தேவையற்ற சம்பவங்கள் நடந்தன. அதனால் ரசிகர்களின் செயலுக்காக நான் ஸ்மித்திடம் மன்னிப்புக் கேட்டேன்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :