1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:43 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி ஓய்வு அறிவிப்பு

இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் லஷ்மிபதி பாலாஜி முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

 
ஆனால் தொடர்ந்து டிஎன்பிஎல், மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடவிருப்பதாக தெரிவித்துள்ளார். ஓரளவுக்கு குறைவாக ஆடினாலும் தேசிய அளவில் நல்ல பெயர் எடுத்தார் பாலாஜி. வக்கார் யூனிஸுக்கு பிடித்த இந்திய பவுலர் பாலாஜி. இவரது ஆதர்சம் அனில் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது. 
 
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை ஆடாவிட்டாலும், 2004-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரில் பாகிஸ்தானில் பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி. இது பாலாஜியின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு டெஸ்ட் தொடராகும், இறுதி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்ற போது இன்சமாம் உல் ஹக் விக்கெட் உட்பட அந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
 
பிறகு மொஹாலி டெஸ்ட் போட்டியில் இதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக மணிக்கு 140கிமீ வேகத்தில் பந்தை வீசி, பாகிஸ்தான் பேட்டிங்கை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி 9 விக்கெட்டுகளை அந்த டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினார். 
 
8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாலாஜியின் சராசரி 37.18. இதில் 2 முறை இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் ஒருமுறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 
 
முதல் தர கிரிக்கெட்டில் 106 போட்டிகலில் 26.10 என்ற சராசரியின் கீழ் 330 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 30 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிக்கன விகிதம் 5.57. ஒருமுறை 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 
 
தமிழக அணிக்காக இவர் அறிமுகமான போட்டி கொழும்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு எதிரான போட்டியாகும். 2-ம் நாளில் அசத்தலாக வீசிய பாலாஜி, 9 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 
 
ஒரு அருமையான பவுலர் இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவையாற்ற முடியாமல் போனது இந்திய கிரிக்கெட்டிற்கு இழப்பாகும்.