1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (14:40 IST)

இந்தியா 90 ரன்களில் அபார வெற்றி- கலக்கிய ரோஹித், குல்தீப்…

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் தவான் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அரைசதம் அடித்த தவான் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் கோஹ்லி ரோஹித்தோடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க சதத்தை நெருங்கிய ரோஹித் 87 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

அதன் பின்னர் கோஹ்லியும் அம்பாத்தி ராயுடுவும் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். கோஹ்லி 43 ரன்களும் ராயுடு 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் தோனியும் கேதார் ஜாதவ்வும் அதிரடியாக விளையாட இந்தியா 324 ரன்கள் சேர்த்தது. தோனி 48 ரன்களோடும் கேதர் ஜாதவ் 22 ரன்களோடும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் பவுல்ட் மற்றும் ஃபெர்குசன் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 

அதன் பின்னர் 325 ரன்கள் என்ற கடின இலக்கோடுக் களமிறங்கிய நியுசிலாந்து அணியில் டக் பிரேஸ்வெல்லைத் தவிர அனைத்து வீரர்களும் வந்த உடனேயே ஆட்டமிழக்க நியுசிலாந்து அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.