புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (17:54 IST)

நான்கு நாள்கள் டெஸ்ட் போட்டி முட்டாள்தனமானது – பிரபலவீரர் குற்றச்சாட்டு !

ஐசிசி ஆலோசிக்கும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி என்பது முட்டாள்தனமான யோசனை என்று ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளை காண மைதானத்துக்கு வரும் ரசிகர்களின் கூட்டமும் குறைந்து வருகிறது. இதை முன்னிட்டு டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைக்க ஐசிசி ஆலோசனை செய்து வருகிறது. இதன் மூலம் அதிகமாக கிடைக்கும் நாட்களை கொண்டு வேறு வடிவிலான போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும் ஒருநாளுக்கு வீசப்படும் 90 ஓவர்கள் என்ற விகிதத்தில் இருந்து 98 ஓவர்கள் வரை வீச உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அதிக ஓவர்கள் இழப்பது குறைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் ‘ நான்கு நாட்கள் டெஸ்ட் என்பது முட்டாள்தனமான யோசனை. உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் 5ஆவது நாளின் இறுதி வரை நடந்தவைதான். இதன் மூலம் மீண்டும் டிரா ஆகும் போட்டிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒன்றாக அமையும். அதனால் ஐசிசி இதனை அனுமதிக்காது என்று நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.