1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:59 IST)

அமீர் போன்ற வழிதவறிய குழந்தைகளுக்காக பள்ளி அமைக்க வேண்டும்… ஹர்பஜன் சிங் கோரிக்கை!

முகமது அமிருக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் சமூகவலைதளத்தில் மோதல் ஏற்பட்டு காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பின் விளைவுகள் இன்னும் முடிந்தபாடில்லை. சில தினங்களுக்கு முன்னர் முகமது அமீர் இது சம்மந்தமாக கருத்து பதிவிட்டார். இதனால் சீண்டப்பட்ட இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ‘முகமது அமீர் பந்தில் தான் சிக்ஸ் அடித்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முகமது அமீர் ஹர்பஜன் சிங் ஓவரில் அப்ரிடி 4 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடித்த வீடியோவை பகிர்ந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங் ‘நான் சேற்றுக்குள் இறங்கவேண்டும் என நினைக்கவில்லை. என்னுடன் பேசும் தகுதி அற்றவர் அவர். அவர் ஒரு அவமானச் சின்னம். சுயமரியாதையையும் கிரிக்கெட்டையும் விற்றவர். ’ என அமீரை இடுப்புக்கு கீழ் அடித்துள்ளார். ஒரு விவாதத்தில் தனது குற்றத்துக்காக தண்டனை பெற்று திரும்பியவரை மீண்டும் இழிவுபடுத்தும் விதமாக பேசுவது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து இப்போது ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ‘முகமது அமீர் போன்ற வழிதவறிய குழந்தைகளுக்காக நீங்கள் பள்ளிக்கூடங்களை திறக்கவேண்டும். அவர்களுக்கு முதியவர்களோடு எப்படி பேசுவது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். எங்கள் நாட்டில் நாங்கள் குழந்தைகளிடம் எப்படி பெரியவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறோம். இப்போது கூட நாங்கள் வாசிம் அக்ரம் போன்ற மூத்த வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.