1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (12:29 IST)

தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை..!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி  ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக தோனி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் 15 நாள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, அதை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகாரி பேசியதாக தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva