ரூ.200 முதல் ரூ.8 ஆயிரம் வரை..! – செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் விற்பனை தொடக்கம்!
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.
மாமல்லபுரத்தில் உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
மொத்தமாக 6 விதமாக டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்படுகின்றன. அதன்படி 19 வயதிற்கு குறைவான மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் அரங்கு 2ல் போட்டியை காண 2 மணி நேரத்திற்கு ரூ.200 ரூபாயும், அரங்கு 1ல் போட்டியை காண ரூ.300 ரூபாயும் டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இந்திய குடியுரிமை உள்ள பொதுமக்களுக்கு அரங்கு 2ல் போட்டிகளை காண ரூ.2,000, அரங்கு 1ல் நடைபெறும் போட்டிகளை காண ரூ.3000 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அரங்கு 2ல் போட்டிகளை காண ரூ.6000, அரங்கு 1ல் போட்டிகளை காண ரூ.8000 என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.