நாளை நான்காவது டெஸ்ட் – விளையாடுவாரா அஸ்வின் ?
நாளை இந்தியா ஆஸ்திரேலியா இடையில் சிட்னியில் நடைபெற இருக்கும் 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நாளை தொடங்க இருக்கும் 4 ஆவது போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது குறைந்த பட்சம் டிரா செய்தாலோ கூட ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற அவப்பெட்யரை நீக்கி 70 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சாதனையைப் படைக்கும்.
ஆனால் அந்த சாதனை நிகழ்ந்துவிடக்கூடாது என்று ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் இருப்பதால் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் நாளைத் தொடங்க இருக்கும் போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குழந்தைப் பிறந்துள்ள காரணத்தால் மும்பை சென்றுள்ள ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக மோசமான ஃபார்மில் இருக்கும் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்த அஸ்வினின் பெயர் இந்த 13 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளது. அவர் விளையாடுவாரா என்பது கடைசி நேரத்தில் முடிவெடுக்கப்படுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் இந்திய அணியின் செய்தித் தொடர்பாளர் அஸ்வின் உடற்தகுதித் தேர்வில் தோற்றுவிட்டார் அதனால் அவர் விளையாடமாட்டார் எனக் கூறியுள்ளதால் அஸ்வின் விளையாடுவது சந்தேகமே என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி விவரம்
விராட் கோலி(கேப்டன்), ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, அஜின்கஹே ரஹானே, ரிஷாப் பந்த், கே.எல்.ராகுல், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.