1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 21 மார்ச் 2016 (13:27 IST)

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடிகர் சங்கம்

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 -வது பொதுக்குழு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.


 


புதிய சங்க நிர்வாகிகள் பதவியேற்றபின் நடக்கும் பொதுக்குழு என்பதால் பலவகைகளில் இந்த பொதுக்குழு முக்கியம் பெறுகிறது.
 
நடிகர் சங்க கட்டிடம் இருந்த 19 கிரவுண்ட் நிலத்தை சொற்ப தொகைக்கு தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்குவிட்டதை பிரதானமாக எதிர்த்தே இன்றைய நிர்வாகிகள் சங்கத் தேர்தலை எதிர் கொண்டனர், வெற்றியும் பெற்றனர். முதல் வேலையாக தனியார் நிறுவனத்துடன் சங்கத்தின் பழைய நிர்வாகிகள் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து சங்க இடத்தை மீட்டனர். இதற்கான செலவு 2 கோடிகள் என கூறப்படுகிறது. 
 
சூர்யா. ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்ட நடிகர்கள் தந்த நன்கொடையை தாண்டி தற்போது நடிகர் சங்கத்துக்கு 2 கோடிகள் கடன் உள்ளது. இந்த கடனை அடைக்கவும், புதிய கட்டிடம் கட்டவும் நட்சத்திர கிரிக்கெட் நடத்த உள்ளனர். இது முதல்கட்டம்தான். கலை நிகழ்ச்சிகள், சங்க நிதிக்காக படம் எடுத்தல் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
 
முதற்கட்டமாக சங்கத்தின் புதிய கட்டிட மாதிரியை பொதுக்குழுவில் வெளியிட்டனர். மூத்த உறுப்பினர் நடிகர் சிவகுமாரும், வசனகர்த்தா ஆரூர்தாஸும் இணைந்து இதனை அறிமுகப்படுத்தினர். இந்த புதிய கட்டிடத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம், சிறிய கருத்தரங்கு கூடம், ப்ரீவியூ திரையரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறிய கல்யாண மண்டபம், நடன பயிற்சி அரங்கு என பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. ப்ரீவியூ திரையரங்குக்காக செலவை கார்த்தி, சூர்யா, சிவகுமார் ஏற்றுக் கொண்டனர். ஐசரி கணேஷ் திருமண மண்டபம் கட்டுவதற்கான செலவை ஏற்றுக் கொண்டார். இதேபோல் ஒவ்வொரு பெரிய நடிகரையும் ஒரு செலவை ஏற்றுக் கொள்ள வைக்கும் திட்டம் உள்ளது நிர்வாகிகளுக்கு. 

இந்த மொத்த கட்டிடத்தின் செலவு 26 கோடிகள். இதிலிருந்து வருடத்துக்கு 6 கோடிகள் வருமானம் வருவதற்கான ஏற்பாட்டையும் திட்டமிட்டுள்ளதாக பொதுக்குழுவில் அறிவித்தனர். சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், தனியாரிடமிருந்து மாதம் சங்கத்துக்கு 25 லட்சங்கள் கிடைக்கும் என்பதையே பிரதானமாக சுட்டிக்காட்டி பேசி வந்தார். ஆனால், புதிய நிர்வாகிகள் மாதம் 50 லட்சங்கள் கிடைப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளனர். இதில் முக்கியமானது, நிலம் முதல் கட்டிடம்வரை சரத்குமாரின் ஒப்பந்தத்தில் தனியார்வசமிருக்கும். ஆனால், இப்போது நிலம், கட்டிடம் முதற்கொண்டு அனைத்தும் நடிகர் சங்கத்துக்கே சொந்தம். கூடுதலாக வருமானம் மாதம் 50 லட்சங்கள்.
 
புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் அர்த்தத்தோடும், எதிர்கால திட்டத்தோடும் உள்ளதை இந்த பொதுக்குழு எடுத்துக் காட்டியுள்ளது. நிதி திரட்டுதல், நலிந்த கலைஞர்களுக்கு உதவி, அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய இணையதளம் என்று புதிய தலைமையின்கீழ் நடிகர் சங்க செயல்பாடுகள் பொலிவு பெற்றுள்ளன.
 
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு நமது மனப்பூர்வமான வாழ்த்துகள்.