வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 3 மார்ச் 2016 (10:41 IST)

நாளை வெளியாகும் முக்கிய படங்கள் ஒரு பார்வை

நாளை வெளியாகும் முக்கிய படங்கள் ஒரு பார்வை

நாளை மூன்று முக்கிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்துடன் ஒரு ஆங்கில திரைப்படம்.


 
 
பிச்சைக்காரன்
 
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்தப் படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷனுடன் தயாராகியிருக்கிறது, பிச்சைக்காரன். கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி சசி இயக்க, விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து நடித்துள்ளார்.
 
'நம் எல்லோருக்குள்ளும் ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான். பிச்சையின் தன்மைதான் மாறுபடுகிறது' என இந்தப் படம் குறித்து விஜய் ஆண்டனி கூறியுள்ளார். சேத்னா டைட்டன் என்பவர் நாயகி. படத்தில் நிஜ பிச்சைக்காரர்களும் நடித்துள்ளனர்.
 
'கலைப் படத்திற்கான கருவை கமர்ஷியலாக தந்திருக்கிறேன்' என சசி கூறியுள்ளார். விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
 
சவுகார்பேட்டை
 
ஆலயம் படத்தில் இயக்குனரான வடிவுடையான் சாமியார்கள் கதை முதல் நிஜக்கதைவரை முயன்று பார்த்தும் வெற்றி கிடைக்காமல் கடைசியில் பேய் கதையில் சரணடைந்திருக்கிறார். ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடித்துள்ள இந்த பேய் படத்தின் பிரதான அம்சமே, படத்தில் தீர்க்கமற நிறைந்திருக்கும் பேய்கள். கிளைமாக்ஸில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேய்கள் வருகின்றனவாம்.
 
வடிவுடையானின் பிற படங்கள் போலவே நடிகர்கள் கஷ்டப்பட்டு நடித்துள்ளனர். குறிப்பாக வடிவுக்கரசி சுடுகாட்டில் வெறும் தரையில் படுத்து நடித்துள்ளார். அது போல் மேக்கப். பட்ஜெட்டில் கணிசமான பகுதி மேக்கப்பிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
 
ஜான் பீட்டர் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு நா.முத்துக்குமார், விவேகா, சொற்கோ ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கனல் கண்ணன் ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளார். சாலோம் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப் படத்தை, பேய் படங்களில் ஹோல்சேல் டீலரான ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.....................

 


போக்கிரி ராஜா
 
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் முதல்முறையாக எதிர்மறை நாயகனாக நடித்துள்ளார் சிபி. நாயகன் ஜீவா. 
 
காதல், காமெடி, ஆக்ஷன் என்று கமர்ஷியலாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா நாயகி. டி.இமான் இசையமைத்துள்ளார். விஜய்யின் பி.ஆர்.ஓ.வும், புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பி.டி.செல்வகுமார் படத்தை தயாரித்துள்ளார். புலி நஷ்டத்துக்காக இந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் கார்னர் செய்ததால், சென்ற வாரம் வெளியாக வேண்டிய படம், நாளை வெளியாகிறது. இதன் வெளியீட்டுக்காக புலியால் நஷ்டமடைந்தவர்களுக்கு 75 லட்சங்கள் நஷ்டஈடு தர செல்வகுமார் சம்மதித்துள்ளார்.
 
லண்டன் ஹேஸ் ஃபாலன்
 
இரண்டு வருடங்கள் முன்பு, ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன் படம் வெளிவந்தது. ஒலிம்பஸ் என்பது அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை குறிப்பது. வடகொரிய தீவிரவாதிகள் வெள்ளை மாளியையை தாக்கி அதனையும், அதிபரையும் சிறைபிடிப்பதுதான் கதை. ஹீரோ ஜெரார்டு பட்லர் தீவிரவாதிகளை வீழ்த்தி வெள்ளை மாளிகையையும், அதிபரையும் காப்பாற்றுவார்.
 
படம் யுஎஸ்ஸைவிட யுஎஸ்ஸுக்கு வெளியே சிறப்பாகப் போனது. அதனால் அதே பாணியில், லண்டன் ஹேஸ் ஃபாலன் திரைப்படத்தை எடுத்துள்ளனர். ஜெரார்டு பட்லர், மோர்கன் ஃப்ரீமேன், ஆரோன் எக்கார்ட் என்று ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலனில் நடித்தவர்களே இதிலும் நடித்துள்ளனர். 
 
அந்தப் படத்தில் வரும் அதே கதாபாத்திரம் என்பது கூடுதல் தகவல்.
 
இந்தப் படங்கள் தவிர, பக்கி பசங்க என்ற தமிழ்ப் படம் ஒன்றும் நாளை வெளியாகிறது.