வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2016 (13:56 IST)

நாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

நாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

நாளை நான்குப்படங்கள் வெளியாகின்றன. இரண்டு படங்கள் அனைவரும் அறிந்தது. இரண்டு படங்கள் சின்ன பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து தயாரானவை.
 

 


இறுதிச்சுற்று
 
வேட்டை படத்துக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகும் படம் இறுதிச்சுற்று. இந்தப் படத்தில் பாக்ஸராக மாதவன் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக யுஎஸ் சென்று பல மாதங்கள் பயிற்சி எடுத்து, பாக்ஸருக்கான தோற்றத்தை கொண்டு வந்தார் மாதவன். பெண்களுக்கு பாக்ஸிங் ட்ரெயினிங் தருகிறவராக இதில் மாதவன் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்தின் ஹைலைட் நாயகியாக நடித்துள்ள ரித்திகா சிங். இவர் தேசிய அளவில் சிறந்த பாக்ஸர். ஒரு காட்சியில், ரித்திகா சிங் மாதவனை அடிக்க வேண்டும். ரித்திகா விட்ட குத்தில் மாதவனின் ஒரு பல் பெயர்ந்திருக்கிறது. அப்படி மாதவன் ரத்தம் சிந்தி நடித்துள்ள இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் தயாராகியுள்ளது. இந்தியில் சால காதூஸ் என்ற பெயரில் வெளியாகிறது.
 
மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளரும், துரோகி படத்தின் இயக்குனருமான சுதா கொங்கரா படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோவும், திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. யுடிவி படத்தை வெளியிடுகிறது.
 
இந்தி பதிப்பை மாதவன், இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை.
 
நாளை வெளியாகும் இறுதிச்சுற்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று.
 
அரண்மனை 2
 
சுந்தர் சி.யின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்துக்கும், அவர் ஏற்கனவே இயக்கிய அரண்மனை படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரண்மனை படத்தில் கணவன் மனைவியாக வந்த மனோபாலா, கோவை சரளா இதில் அண்ணன், தங்கையாக வருகிறார்களாம். அதேநேரம், அரண்மனையில் வந்த சுந்தர் சி.யின் கதாபாத்திரம் மட்டும் அப்படியே வருகிறதாம்.
 
த்ரிஷா, சித்தார்த், ஹன்சிகா நடித்துள்ள இந்தப் படத்தை வழக்கமான பேய் படமாக இல்லாமல் கலர்ஃபுல்லாக எடுத்திருக்கிறார் சுந்தர் சி. வெறும் ஹாரர் மட்டுமிருந்தால் குடும்பப் பார்வையளர்களை கவர முடியாது என்பதால் காதல், காமெடி, சென்டிமெண்ட், பாடல்கள் என்று கலந்துகட்டி எடுத்துள்ளார்.
 
அரண்மனையில் சந்தானம் காமெடிக்கு பொறுப்பேற்றார். இந்தப் படத்தில் சந்தானத்துக்குப் பதில் சூரி. விவேக்கையே காமெடி பண்ண வைத்த சுந்தர் சி.யின் படத்தில் யார் நடித்தாலும் சிரிப்புக்கு உத்தரவாதம் கியாரண்டி.
 
அரண்மனை 2 -க்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு, சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ், நடனம் பிருந்தா, ஷோபி, பாடல்கள் பிறைசூடன்.
 
ஹாரர் படமென்றாலும் யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது படத்துக்கு. குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்த இப்படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
 
இந்த இரு படங்கள் தவிர மகேந்திர கணபதி இயக்கியிருக்கும் நனையாத மழையே, ல.மாதவன் இயக்கியிருக்கும் நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க படமும் வெளியாகின்றன.