அஜித் குறித்து சிம்பு ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அக்டோபர் 9 -ஆம் தேதிதான் சிம்பு பேஸ்புக்கில் இணைந்தார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அஜித்தைப் பற்றி காட்சிகள் இருக்கிறதா என்று கேட்டிருந்தார்.
தன்னுடைய மன்மதன், சிலம்பாட்டம் படங்களில் அஜித் குறித்த காட்சிகளை சிம்பு வைத்திருந்தார். மன்மதனில் அஜித்தின் கட்அவுட்டை வைத்து, தல என்று கத்துவார். அப்படி புதிய படங்களிலும் அஜித்தை வைத்து காட்சி இடம்பெறுகிறதா என்பதுதான் கேள்வி. அதற்கு சிம்பு அளித்த பதல்தான் சர்ச்சையாகியிருக்கிறது. அப்படி என்ன சொன்னார் சிம்பு...?
அஜித் சாரை பற்றி யாருமே பேசாத போது, அவருடைய தோல்வியடைந்த படத்தின் கட் அவுட்டை வைத்து தல என்று கத்தியவன் நான். தற்போது அவர் வளர்ந்தது மட்டுமன்றி அனைவருமே அவரை பெயரை உபயோகித்து வருகிறார்கள். இனிமேல் அதைப் போன்று நான் செய்ய மாட்டேன். அஜித் சாரின் வளர்ச்சியால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருந்தார்.
சிம்புவின் பதிலில் அஜித் யார் என்றே தெரியாத காலத்திலேயே அவரது பெயரை சொன்னவன் நான். அதன் பிறகுதான் மற்றவர்கள் அஜித் குறித்தே பேச ஆரம்பித்தார்கள் என்பது போன்ற தொனி தொக்கி நிற்கிறது. சிம்பு மன்மதன், சிலம்பாட்டத்தில் நடிப்பதற்கு முன்பே அவரை தல என்றுதான் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். ஏதோ சிம்புதான் முதலில் அழைத்தது போலவும், அவர் தனது படங்களில் தல என்று சொல்ல ஆரம்பித்த பிறகுதான் அஜித்தைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிய வந்தது போலவும் அவரது பதில் உள்ளது. இதுதான் இணையத்தில் சர்ச்சையானது.
இதனை இருவிதமாக ரசிகர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். சிம்பு படம் பிரச்சனையில் சிக்கியபோது விஜய்தான் என்ன ஏது என்று விசாரித்தார். அவர் நாளெல்லாம் தல என்று கொண்டாடிய அஜித் அதுபற்றி கவலைப்படவில்லை. அதனைத் தொடர்ந்து புலி ஆடியோ விழாவில் சிம்புவின் தந்தை விஜய்யை கொண்டாடி தீர்த்தார். ஆக, அஜித்திடமிருந்து சிம்புவின் பாசம் விஜய் பக்கம் சாய்ந்துள்ளது, அதுதான் இந்த இன்சல்ட் என்கிறார்கள்.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்திருக்கும் சிம்பு, "மன்மதன், சிலம்பாட்டம் படங்களில் அஜித் படத்தின் வசனம், காட்சியை வைத்த போது என்னை யாரும் கேள்வி கேட்கவில்லை. இப்போது அவர் பெரிய இடத்துக்கு போன பிறகு நீங்கள் ஏன் அவருடைய பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அஜித் சார் அந்த காலத்தில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கினார். அப்போது அவரை தல என்று தூக்கி வைத்துக் கொண்டாடாத நேரத்திலேயே, அவருடைய பெயரை நாம் சொல்ல வேண்டும் என்று நினைத்துச் சொன்னவன் நான்.
அஜித் சாரை தூக்கிவிட நான் யார்? அவருடைய கடின உழைப்பு தான் அவரை இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது. அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததால் மட்டுமே, முன்பே எனது படங்களில் அவருடைய கட் அவுட்டை வைத்து கத்தினேன். அனைவருமே அவருடைய பெயரை உபயோகிக்கும் போது, நானும் உபயோகித்தால் அவருடைய பெயரை வைத்து நான் பெரிய ஆளாக நினைப்பதாக சொல்வது காமெடியாக இருக்கிறது. இன்று பலரும் அவருடைய பெயரை உபயோகிக்கும் அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார். அதனால் நான் அவருடைய பெயரை உபயோகிக்க மாட்டேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள்" என்று சிம்பு கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் சிம்பு ஒன்றை புரிந்து கொள்ளவேயில்லை. அவர் தல என்று தனது படத்தில் கத்துவதற்கு முன்பே அஜித்துக்கு பல லட்சம் ரசிகர்கள் இருந்தார்கள். சிம்பு அஜித்பட காட்சிகளை வைத்த பிறகுதான் அவர் பிரபலமானது போல் சொல்வது முற்றியலும் தவறு.
அதேநேரம், அஜித்துக்கு திரையுலகில் முன்பு இருந்த ஒரேயொரு வெளிப்படையான ரசிகர் சிம்பு மட்டுமே. சமீபமாகத்தான் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ், அப்புக்குட்டி என்று பலரும் அஜித்தை தல என்று மீடியாவில் உயர்த்தி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை மனதில் வைத்து சிம்பு சொன்னது, ரசிகர்களுக்கு வேறு விதமாக புரிந்து கொள்ளும்படி ஆனதுதான் மொத்த சர்ச்சைக்கும் காரணம்.
சிம்பு இனியாவது தெளிவாகப் பேசினால் நலம்.