1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2017 (16:28 IST)

ஓபிஎஸ் VS சசிகலா பதவிப் போர் - திரை நட்சத்திரங்கள் யார் பக்கம்?

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், வி.கே.சசிகலாவுக்கும் நடந்து வரும் அடுத்த முதல்வர் யார் போட்டி இந்திய அளவில்  கவனம் பெற்றுள்ளது. இதுவரை அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த பாமரரும் படித்தவரும் இந்த விஷயத்தில் ஏதோவொரு கருத்தை கொண்டுள்ளனர். மாபியா கும்பலான மன்னார்குடி சசிகலா முதல்வராகக் கூடாது, அது ஏதோ ஒருவகையில் தங்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்று அவர்கள் கருதுகின்றனர்.

 
பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதிகாரமிக்கவர்களுக்கு சொம்பு அடிக்கும் திரைத்துறை சங்கங்கள் யார் பக்கம் தராசு  சாய்கிறது என்று கவலையோடு உற்று நோக்கி வருகின்றன. அவசரப்பட்டு இந்தமுறை சொம்பு அடித்து மாட்டிக் கொள்ள அவை  தயாராகயில்லை.
 
சரி, திரைநட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள்?
 
நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடுக்கடுக்காக பல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.
 
"நிம்மதியாய் உறங்கு தமிழகமே... அவர்கள் நமக்கு முன்னால் விழித்து விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 7-ந்  தேதி எனக்கு பிரச்சினைகள் ஏற்பட்டன. மக்களின் அன்பு மட்டும் இருந்தால், எந்த சூழ்ச்சியில் இருந்தும் மீண்டு வெற்றி  பெறலாம்."
 
"பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து நாம்  குற்றமற்ற கடமை செய்வோம் முடியுமா?"
 
"தமிழ்நாட்டை தனிநாடாக பிரிக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்காக இந்தியா அகிம்சை வழியில் போராடும். யாரும் இறக்க  மாட்டார்கள். ஆனால் அறியாதவர்கள் உயிரோடு மீள்வார்கள்."
 
"சத்யராஜ்... பெரியார் பெரியார்னு வாய் கிழிய பேசும் நாம் இந்த நேரத்தில் ஒரு டப்மாஷாவது போட வேண்டாமா? நாம்  முதலில் மனிதர்கள். பிறகுதான் நடிகர்கள்."
 
"மாதவன்... நீங்களும் தமிழக பிரச்சினை குறித்து பேசுங்கள். மோசமான அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நேரம்.  அதிருப்தியை சத்தமாக சொல்லுங்கள்."
 
நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓ.பன்னீர்செல்வம் சரியான நேரத்தில் சிறப்பாக துணிச்சலாக பேசி இருக்கிறார்.  பாராட்டுகள்" என்று கூறியுள்ளார்.
 
நடிகர் சித்தார்த் கூறும்போது, "மெரினாவில் ஓ.பி.எஸ். தமிழக அரசியல் உண்மையாகவே கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும்  ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் சீரியல்களைப்போலவே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
 
இசையமைப்பாளர் இமான், "தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட்டு இருக்கிறது. இதுதான் சிறந்த வழி. சரியான நேரத்தில்  சரியான இடத்தில் இருந்து சரியான பேச்சு. நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
 
நடிகர் அருள்நிதி, "தமிழக மக்களுக்கு உண்மையை தெரிவித்து நேர்மையாக நடந்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தைரியமான  பேச்சு" என்று கூறியுள்ளார்.
 
நடிகை குஷ்பு, "ஒரு நாயகன் உதயமாகிறான்" என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார்.
 
நடிகை கவுதமி, "இதற்காகத்தான் அம்மா ஓ.பன்னீர் செல்வத்தை தேர்ந்தெடுத்தார். தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர். தன்மீது அம்மா வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.
 
நடிகர் மன்சூர் அலிகான் கூறும்போது, "ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரிஜினல் பன்னீர்செல்வம் ஆகி இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கிண்டல்களை எதிர்கொண்டவர் அவர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பதிவான சி.சி.டி.வி கேமரா காட்சிகளை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் சி.சி.டி.வி  கேமராக்களை உடைக்கும் போராட்டத்தை நடத்துவேன்" என்று கூறியுள்ளார்.
 
"சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துகளை அபகரிக்க உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். பன்னீர்செல்வம்  உண்மையான ஆம்பளை. சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில், எதற்காக முதல்வராக வரவேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார்? எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு  பன்னீர் செல்வத்துக்குத்தான் உள்ளது" என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.
 
இதேபோல் எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்களும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில்  சசிகலா தோல்விமுகத்தில்தான் உள்ளார்.