ஆகஸ்ட் மாதம் 5 முதல் 21 வரை ஒலிம்பிக் போட்டிகள் பிரெசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடக்க உள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டியின் இந்தியாவின் நல்லெண்ண தூதராக சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு விளையாட்டு வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவுக்கு விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசியல், விளையாட்டு, கல்வி, தேர்தல், சமூக நலன், விழிப்புணர்வு, நுகர்வு என்று எதுவாக இருந்தாலும் சினிமா நட்சத்திரங்களை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்துவதே தனியார் மற்றும் அரசின் செயலாக இருந்து வருகிறது. கேட்டால் இளைய தலைமுறை சினிமா நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் செய்தால்தான் கண்டு
கொள்கிறது என்ற தட்டையான பதிலில் அனைத்துக்கும் வாய்பூட்டு போட்டுவிடுவார்கள். இளைய தலைமுறை சினிமாவை தவிர எதையும் கண்டு கொள்வதில்லை என்று குறைபட்டுக்கொள்பவர்கள்தான் இந்த சமாளிப்பு பதிலையும் சொல்கிறார்கள்.
ஒலிம்பிக் போட்டிக்கும், திரையில் மட்டும் ஹீரோயிசத்தை காட்டும் நட்சத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களால் இந்திய விளையாட்டுத்துறை ஊக்கம் பெறப்போவதோ, உத்வேகம் கொள்ளப் போவதே இல்லை. முக்கியமாக கிரிக்கெட் வீரர்கள் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் அனைவரும் சினிமா நட்சத்திரங்களின் தகுதிக்கு மீறிய முக்கியத்துவத்தால் கசப்படைந்தவர்களாகவே உள்ளனர். இந்த எளிய உண்மையைக்கூட உணர்ந்து கொள்ளாமல் இந்திய ஒலிம்பிக் சங்கம் சல்மான் கானை தூதராக்கியுள்ளது.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் சல்மான் கானை தூதராக்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்திருப்பவர், சல்மான் கான் விளையாட்டுக்காக என்ன செய்தார்? பி.டி.உஷா, மில்கா சிங் போன்றோர் தேசத்துக்காக விளையாடி உள்ளனர். இவர்களை யாரையாவது தூதுவராக நியமித்திருக்கலாம். சல்மான் கானால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தடகள வீரர் மில்கா சிங்கும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். பி.டி.உஷா, துப்பாக்கிசுடுதல் வீரர் ரத்தோர் இருவரில் யாரையாவது நியமித்திருக்கலாம். பாலிவுட் நிகழ்ச்சிகளுக்கு விளையாட்டு வீரர்களையா தூதுவர்களாக நியமிக்கிறார்கள் என காட்டமாக கேட்டுள்ளார்.
இவர்களின் கருத்தையே பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் பிரதிபலித்துள்ளனர்.
அதேநேரம், 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, ஒந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் சாதிக்க இது உதவும் என குறிப்பிட்டுள்ளார் (கிண்டலாக இருக்குமோ?).
அனைத்துத்துறைகளிலும் சினிமா நட்சத்திரங்களுக்கு தரப்படும் இந்த முக்கியத்துவம்தான் விளையாட்டுத்துறை முதற்கொண்டு மற்ற எந்தத்துறையையும் இளம் தலைமுறை கண்டு கொள்ளாததற்கும், புறக்கணிப்பதற்கும் காரணம். இந்திய ஒலிம்பிக் சங்கம் என்ற வீங்கிய மூளைக்கு இது எப்படி தெரியாமல் போனது?