வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜான் பாபுராஜ்
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (12:18 IST)

ஹீரோக்களை முந்தும் நான் ஸ்டாப் நயன்தாரா

தமிழ் திரையுலகில் நம்ப முடியாதவை நடக்கின்றன. ஒரு நடிகை ஒரு படத்தின் வசூலை நிர்ணயிப்பது தமிழில் அரிதிலும் அரிது. இந்தியில் அப்படி நிகழ்ந்திருக்கிறது. வித்யா பாலனின் படங்கள் அவருக்காக மட்டுமே பார்க்கப்படுகின்றன. அதேபோல் கங்கனா ரனவத்தின் படங்கள். இவர்கள் நடிக்கும் நாயகி மையப் படங்கள் 60 முதல் 100 கோடிகள்வரை வசூலிக்கின்றன.


 

தென்னிந்தியாவில் அப்படியொரு நிலைமைக்கு ஆரம்பப்புள்ளி வைத்தவர், அனுஷ்கா. அவரது அருந்ததி தமிழ், தெலுங்கில் வசூலை அள்ளிச் சுருட்டியது. அனுஷ்காவை நம்பி ருத்ரமாதேவி போன்ற பிரமாண்ட படங்களை எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

இப்போது அந்த இடத்துக்கு வந்திருக்கிறார் நயன்தாரா. அவரது முதல் நாயகி மையப் படமான அனாமிகா சரியாகப் போகவில்லை. அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என தெலுங்கு படங்களில் நடிக்க தெலுங்கு திரையுலகம் ஒரு வருடம் தடை விதித்தது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தமிழில் தொடர்ந்து நடித்தார் நயன்தாரா. அவரது இரண்டாவது நாயகி மையப் படம், மாயா.

ஹாரர் படமான இது நல்ல கலெக்ஷனை பெற்றது. மாயா வெளியான வருடத்தில் வெற்றி பெற்ற சில ஹாரர் படங்களில் அதுவும் ஒன்று. நயன்தாராவை நம்பி பல கோடிகள் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராயினர்.


 

தற்போது சற்குணம் மற்றும் ஹதேஷ் ஜபக் இணைந்து தயாரிக்கும் டோரா படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதுவும் ஹாரர் படம்தான். இதன் சிறப்பு, தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் தயாராகிறது. சற்குணத்தின் அசிஸ்டென்ட் தாஸ் ராமசாமி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

அத்துடன் கோபி நயினார் இயக்கத்தில் அறம் படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தில் அவர் கலெக்டராக வருகிறார். மக்கள் பிரச்சனையை இதுவரை திரையில் நாயகர்கள் பேசி வந்தார்கள். அவர்கள்தான் தீர்த்து வைப்பார்கள். அறம் படத்தில் கிராமத்து ஜனங்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதும், தீர்த்து வைப்பதும் நயன்தாரா.

இவ்விரு படங்களும் வெளியாகவிருக்கும் நிலையில், கொலையுதிர்காலம் படத்தில் நாயகியாகியுள்ளார். சொல்லாமலே தெரிந்திருக்கும், முந்தைய இரு படங்களைப் போல இதுவும் நாயகி மையப் படம்தான். சக்ரி டோலட்டி இயக்கத்தில் தயாராகும் இந்தப் படத்தை பூஜா பிலிம்ஸுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். எத்தனையோ நாயக நண்பர்கள் இருந்தும் நயன்தாரா நடிக்கும் படத்தின் மூலம்தான் யுவன் தயாரிப்பாளராகிறார். அவரது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

அஜித், விஜய் அளவுக்கு இல்லையென்றாலும் இரண்டாம்கட்ட நாயகர்களின் படங்களுக்கு செலவளிக்கும் பட்ஜெட்டை நயன்தாராவை நம்பி செலவிட தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். பொதுவாக ஒரு நடிகை நாயக மையப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் அவரை சேர்ப்பதில்லை, யோசிப்பார்கள்.



ஆனால், நயன்தாரா விஷயத்தில் அப்படியில்லை. சிவகார்த்திகேயன், அதர்வா என்று இளம் நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கில் சாதாரண நாயகி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது.

அந்தவகையில் நயன்தாராவின் இந்த நான் ஸ்டாப் வளர்ச்சி ஆச்சரியத்துக்குரியது.