வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2016 (10:29 IST)

சென்றவார கலெக்ஷன் ரிப்போர்ட்

சென்ற வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் தமிழ் சினிமாவுக்கு வளம் சேர்ப்பதாக இல்லை. தமிழ் திரைத்துறையினரை அதிகம் கவலைக்குள்ளாக்குவது போல் உள்ளன தமிழ்ப் படங்களின் வசூல்.





 


இரண்டு வாரங்கள் முன்பு வெளியான மீண்டும் ஒரு காதல் கதை சென்ற வார இறுதியில் சென்னையில் 93 ஆயிரங்களை மட்டுமே வசூலித்துள்ளது. ஒரு லட்சத்தை வசூலிக்கவும் அதனால் முடியவில்லை என்பது பெரும் ஏமாற்றம். முதல் பத்து தினங்களில் அதன் சென்னை வசூல் 23.50 லட்சங்கள்.
 
இந்தப் படத்துக்கு ஆங்கிலப் படமான மெக்கானிக் ரெஸ்ரெக்ஷன் பரவாயில்லை. சென்ற வார இறுதியில் 1.54 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 52.20 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
சமீபத்தில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த லாபகரமான படம் தர்மதுரை. நகரம், கிராமம் என்று எங்கும் இப்படம் ஓடியது. சென்னையில் கடந்த வார இறுதியில் தர்மதுரை 11.10 லட்சங்களை வசூலித்தது. இதுவரை சென்னையில் அதன் வசூல், 3.44 கோடிகள். நிச்சய வெற்றிப் படம்.
 
ஆங்கிலப் படமான ஸ்கிப்ட்ரேஸ் சென்ற வாரம் வெளியானது. மற்ற ஆங்கிலப் படங்களைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்பு. முதல் மூன்று தினங்களில் சென்னையில் 12.21 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
சென்ற வாரம் வெளியான முக்கியமான தமிழ்ப் படம், குற்றமே தண்டனை. காக்கா முட்டை மணிகண்டன் இயக்கியது. பல்வேறு சர்வதேச திரைவிழாக்களில் திரையிடப்பட்டது. விமர்சகர்கள் நல்ல படம் என்று ஐந்துக்கு மூன்றரை நான்கு ஸ்டார்கள் தந்தார்கள். ஆனால், ரசிகர்கள்...? முதல் மூன்று நாளில் ஐம்பது லட்சமாவது வசூலாகியிருக்க வேண்டும். ஆனால், 28.20 லட்சங்களை மட்டுமே வசூலித்திருக்கிறது. 
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அகிரா திரைப்படம் குற்றமே தண்டனையைவிட அதிகம் வசூலித்துள்ளது. சென்ற வாரம் வெளியான அகிரா முதல் மூன்று தினங்களில் 29.84 லட்சங்களை வசூலித்துள்ளது. முருகதாஸ் பவர்.
 
சென்ற வார பாக்ஸ் ஆபிஸின் ஆச்சரியமான விஷயம், ஆங்கிலப் படமான டோன்ட் ப்ரெத். முதல் மூன்று தினங்களில் 31.50 லட்சங்களை வசூலித்து தமிழ்ப் படங்களை பின்னுக்கு தள்ளியது. 
 
இரண்டாவது ஆச்சரியம் ஜனதா கரேஜ். ஜுனியர் என்டிஆர், மோகன்லால் நடித்த தெலுங்குப் படம். சென்னையின் தெலுங்கு மக்கள் ஆவலாக கூடியதில் படம் இங்கு ஹிட். முதல் மூன்று தினங்களில் 57.05 லட்சங்கள். சென்னை பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடம்.
 
குற்றமே தண்டனையை பாராட்டிய அளவுக்கு விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்ட படம், சசிகுமாரின் கிடாரி. படம் முழுக்க வெட்டுறாங்க குத்துறாங்க என்று விமர்சகர்கள் கதற, ரசிகர்களோ திணறத் திணற படத்தைப் பார்த்திருக்கிறார்கள். முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடியை வசூலித்திருக்கிறது. 
 
விமர்சகர்களை வெறுப்பேற்றிய கிடாரி உண்மையிலேயே ஒரு சுமாரான படம்தான். ஆனால், அது எப்படி ரசிகர்களை கவர்ந்தது? விமர்சகர்கள் அறிய வேண்டியவை நிறைய இருக்கிறது.