ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 23 டிசம்பர் 2015 (10:51 IST)

எந்திரன் 2 குறித்து ஜெயமோகன் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்

எந்திரன் 2 குறித்து ஜெயமோகன் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்
எழுத்தாளர் ஜெயமோகன் 2.0 என பெயர் மாற்றப்பட்டிருக்கும் எந்திரன் 2 படத்தின் வசனத்தை ஷங்கருடன் இணைந்து எழுதியுள்ளார். ஷங்கர் அலுவலகத்திலிருந்து நேராக வீட்டிற்கு வந்தேன் என பல மாதங்கள் முன்பு தனது தளத்தில் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். அப்போதே அவர் எந்திரன் 2 படத்தில் பணிபுரிவது தெரிய வந்தது.


 

 
தனது தளத்தில் தான் பணியாற்றும் படங்கள் குறித்து ஜெயமோகன் அதிகமாக எழுதுவதில்லை. அபூர்வமாக அவர் எழுதுவதும், சினிமாவைக் குறித்த ஒரு சிறுவனின் ஆச்சரியங்களாகவே இருக்கும். விமர்சனங்களை ஒதுக்கி வைத்து, பிரபலங்களை ஆராதிக்கும் ஒரு புதுவகையான ஜெயமோகன் அந்த விவரிப்புகளில் தெரிவார். அவர் சினிமா குறித்து எழுதாமலிருப்பதே நல்லது என்பது அவரது உண்மையான வாசகர்களின் கருத்து.
 
பலரும் எதிர்பார்த்தது போல், 2.0 படம் குறித்தும் சின்னதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அவர். வெண்ணைய்... அதப்படிக்கத்தானே உள்ளே வந்தோம், நீ பாட்டுக்கு பேசிட்டேயிருக்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இதோ ஜெயமோகனின் அந்தப் பதிவு...
 
"இயந்திரனில் என் பணிகள் முடிந்து பல மாதகாலம் ஆகிறது. சின்னச்சின்ன மெருகேற்றல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. ஆர்னால்ட் ஷ்வாஸ்நெகர் நடிப்பதாக அனேகமாக உறுதியாகி இருந்தது. இறுதிநேரம் வரை முயன்றும் அதில் உள்ள சர்வதேச நிதிச்சட்டச் சிக்கல்களால் நடக்க முடியாமல் போயிற்று. அக்ஷய்குமார் அந்த வலுவான எதிர்நாயகன் வேடத்தில் நடிக்கிறார். தமிழின் இன்னொரு பெரிய கதாநாயகனை எண்ணி உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அது. பலமுகங்கள் கொண்டது.
 
உடல்நலம் நன்கு தேறி இருபடங்களில் ஒரேசமயம் ரஜினிகாந்த் நடிப்பது மிக உற்சாகமான செய்தி. அவருடைய குறும்பு வேகம் சினம் மூன்றுக்கும் இடமுள்ள கதாபாத்திரமாக சிட்டி மேலும் விரிவாகியிருக்கிறது. சங்கர் படங்கள் அவருக்கே உரிய தெளிவான ஆனால் சுருக்கமான திரைக்கதை அமைப்பு கொண்டவை. என் பார்வையில் அவரது மிகச்சிறந்த திரைக்கதை அந்நியன். அதைவிட இது ஒருபடி மேல் எனத் தோன்றுகிறது. வலுவான எதிர்நாயகன் காரணமாக எந்திரன் முதல் பகுதியைவிட தீவிரமானது. நான் எப்போதுமே ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கும் அறிவியல்புனைவு படங்களுக்கும் ரசிகன். என்னுள் உள்ள சிறுவனை உற்சாகமடையச் செய்த கதை. அதில் பங்கெடுத்தது நிறைவூட்டுகிறது.
 
இதழாளர்களும் நண்பர்களும் இதைப்பற்றி மேலும் என்னிடம் ஏதும் பேச வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் இது முழுக்க முழுக்க சங்கர் படம். நான் அதில் ஒரு பங்களிப்பை ஆற்றுபவன் மட்டுமே."