எந்திரன் 2 படம் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ரஜினி நாயகனாக நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 இதுவரை இந்தியாவில் தயாரான படங்களைவிட அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் படம் என்பதால் இந்திய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எந்திரன் ஷங்கரின் கனவுப் படம். அதனை கமலை வைத்து இயக்குவது என்பதுதான் ஷங்கரின் திட்டம். கமலை வைத்து போட்டோஷுட் நடத்தப்பட்ட நிலையில், அப்படம் கைவிடப்பட்டது. வேறு படங்களில் ஷங்கர் கவனம் செலுத்தினார்.
மறுபடியும் எந்திரனை படமாக்க முனைந்த போது, படத்தின் பட்ஜெட் கமலால் வசூலிக்க முடியாதபடி வளர்ந்து நின்றது. ஷங்கர் ரஜினியை நாடினார். பலர் விலகிக் கொள்ள, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டது. எந்திரனை விளம்பரப்படுத்தியதிலும், சந்தைப்படுத்தியதிலும் சன் பிக்சர்ஸ் தனது முழுத்திறனையும் காட்டியது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பிராந்திய மொழிகளிலும் பிரமாண்ட பட்ஜெட்டில் படமெடுக்க முடியும், லாபம் சம்பாதிக்க முடியும் என்று எந்திரன் நிரூபித்தது. பாகுபலி போன்ற பிரமாண்ட கனவுகளுக்கு எந்திரனே அடித்தளம். அதன் இரண்டாம் பாகத்தை எந்திரனைவிடவும், முக்கியமாக பாகுபலியைவிடவும் சிறப்பாக, பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்பதே ஷங்கரின் முன்னுள்ள சவால். இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரை அவர் பாகுபலிக்காக ராஜமௌலிக்கு விட்டுத்தர தயாரில்லை. அதற்கு அவர் கைவசம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு, எந்திரன் 2.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....
எந்திரனில் சண்டைக் காட்சிகள் இருந்தாலும் ரஜினியின் பிற படங்களைவிட, ரஜினிக்கு ரிஸ்க் குறைவு. எந்திரனில் வரும் ரயில் சண்டைக் காட்சியிலும், ரோபோ பிரேக் டான்ஸ் ஆடும் காட்சியிலும் ரஜினியின் மாஸ்க் அணிந்த முகம் தெரியாத நபர்தான் சண்டையிட்டதும், நடனமாடியதும். எந்திரன் 2 சண்டைக் காட்சியிலும் ரஜினி முகத்தை மட்டும் தந்தால் போதும். எனவே தயக்கம் இல்லாமல் எந்திரன் 2 இல் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினி.
வில்லனாக அர்னால்ட் ஸ்வாஸ்நேகரை நடிக்க வைக்க முயன்றதும், கடைசியில் அக்ஷய் குமாரை வில்லனாக்கியதும் தெரிந்த கதை. நாயகியாக ஏமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஷங்கரின் படம் என்றால் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகச்சிறந்தவர்களாகவே இருப்பார்கள். எந்திரன் 2 படத்தின் இசையமைப்பாளர் இரு ஆஸ்கர்கள் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு. நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங், கலை இயக்கம் முத்துராஜ்.
ஒப்பனைக்கு உலகின் சிறந்த நிறுவனங்களுள் ஒன்றான வீட்டாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவர்கள்தான் ஐ படத்தின் மேக்கப்பையும் கவனித்துக் கொண்டார்கள். விஷுவல் எபெக்ட் மேற்பார்வை, லீகஸி எபெக்ட்ஸ். இவர்கள் ஜுராஸிக் பார்க், அயன் மேன், அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படங்களின் விஷுவல் எபெக்ட்ஸை அமைத்தவர்கள். சண்டைக் காட்சியை கென்னி பேட்ஸ் அமைக்கிறார். ட்ரான்ஸ்பார்மர்ஸ் படங்களின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் இவர் என்பது உபரி தகவல்.
எந்திரனுக்கும், எந்திரன் 2 -க்குமா முக்கியமான வித்தியாசம், எந்திரன் சாதாரண 2டி திரைப்படம். எந்திரன் 2 3டி இல் தயாராகிறது. முப்பரிமாண காட்சிகள் எந்திரன் 2 -இன் காட்சி அனுபத்தை மென்மேலும் அதிகரிக்கும்.
எந்திரன் 2 -க்காக இந்திய சினிமா காத்திருக்கிறது.