1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (10:27 IST)

காவிரி பிரச்சனையில் சிம்பு என்ன சொன்னார்..?

காவிரி பிரச்சனையில் சிம்பு என்ன சொன்னார்..?

காவிரி பிரச்சனையில் இந்தமுறை சிம்புவின் பெயர் பலமாக அடிபடுகிறது. சிம்பு சொன்னதாக ஒரு கருத்து இணையத்தில் உலவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சிம்புவை புகழ்ந்தனர்.

 
இணையம் தனது முழு வீச்சை எட்டிய பிறகு விஷமிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பிரபலமானவர்கள்தான் இவர்களின் குறி. முக்கியமாக சினிமா நட்சத்திரங்கள். போலி பெயர்களில் ட்விட்டர், பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி எக்குதப்பாக செய்தி போட்டு, சம்பந்தப்பட்டவர்களை அலறவிடுவதில் இணைய விஷயமிகள் கெட்டிக்காரர்கள். காவிரி விஷயத்திலும் இவர்களின் கைங்கர்யம் தொடர்கிறது. 
 
காவிரி பிரச்சனையில் கர்நாடக நடிகர், நடிகைகள் தமிழகத்துக்கு எதிராக பேசியதும், போராடியதும் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இனிமேல் என்னுடைய படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்று சிம்பு சொன்னதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. அதனை பலரும் டேக் செய்தனர். விஷயம் விவாதமானது. சிம்புவை பலரும் அவரது போல்டான ஸ்டேட்மெண்டுக்காக புகழ்ந்தனர். 
 
இந்நிலையில், சிம்பு தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் தனக்கும் அந்த ஸ்டேட்மெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
"தற்போது நான் தாய்லாந்து நாட்டில், அச்சம் என்பது மடமையடா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர்.
 
இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவிரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.
 
சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே. அதே போல, நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.
 
இந்த பிரச்சினையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று சிம்பு தெரிவித்துள்ளார். 
 
சிம்புவின் இந்த அறிக்கை வரவேற்கத்தக்கது. அவர் சொல்வது போல் இது கலைஞர்கள் மேடையேறி நடத்த வேண்டிய பிரச்சாரம் அல்ல. கர்நாடகாவில் அப்படி செய்தார்கள் என்றால் அது அவர்களின் தவறு. கர்நாடகாவில் நடந்துவரும் வன்முறைக்கு அந்த மாநில நடிகர்களின் போராட்டமும், பேச்சும்கூட ஒருகாரணம். அதையே தமிழ் நடிகர்களும் இங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது உணர்ச்சியின் வெளிப்பாடே தவிர அறிவுப்பூர்வமானது அல்ல.
 
நீதிமன்றமும், அரசும் இந்தப் பிரச்சனையை தீர்க்கும் என்று நம்புவோம்.