சிம்பு - அனிருத் கூட்டுத் தயாரிப்பான பீப் பாடல் ஒருநாளில் முளைத்ததில்லை. லூசுப் பெண்ணே என்று ஆரம்பித்து, வேர் இஸ் தி பார்ட்டியில் முளைவிட்டு, எவன்டி உன்னை பெத்தான் கையில் கெடச்சா செத்தான் என காய்விட்டு கடைசியில் பீப் பாடலாக கனிந்திருக்கிறது.
பீப் பாடலில் இலைமறைக்காயாக குறிப்பிடப்படும் பெண் உறுப்பை முன் வைத்தே பெரும்பாலான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எனினும் அவரவர்க்கு அவரவர் பார்வை.
செம்பரம்பாக்கம் ஏரியை முறையான அறிவிப்பு இன்றி தமிழக அரசு திறந்துவிட்டதாலேயே சென்னையில் பேரிழப்பு ஏற்பட்டது என்ற விமர்சனம் வலுப்பட்டு வரும் நிலையில், அதனை திசை திருப்ப திட்டமிட்டு வெளியிடப்பட்டதுதான் பீப் பாடல் என்று கவிஞரும் திமுக உறுப்பினருமான மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.
இந்த காலகட்டத்தை ஒதுக்கி வைத்தாலும், சிம்பு - அனிருத்தின் பாடல் ஒட்டு மொத்த பெண்கள் மீது வைக்கப்பட்ட வசைச் சொல் என்பது அவரது கருத்து.
ஏறக்குறைய இதே கருத்தை எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் கூறியுள்ளார். ஒட்டு மொத்த பெண்கள் மீதும் எச்சில் துப்புவதைப் போல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீப் பாடலை முன் வைத்து நவீன இலக்கியங்களும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகின்றன. நவீன கவிதைகள், கதைகளில் பாலுறுப்புகள் குறித்த சித்தரிப்புகள் அதிகமாகவும், வெளிப்படையாகவும் உள்ளன.
அப்படியிருக்கையில் பீப் பாடலை மட்டும் கேள்விக்குள்ளாக்குவது நியாயமா என்பது சிலரது கேள்வி.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....
பீப் பாடலில் பெண் பாலுறுப்பு, பெண்களை வசைபாடும் அர்த்தத்தில் வைக்கப்பட்டுள்ளது. பெண்களை கொச்சைப்படுத்துவது அதன் நோக்கம். நவீன இலக்கியங்களில் பெண்களை கொச்சைப்படுத்துவதாகவோ, வெற்று பாலுணர்ச்சியை தூண்டுவதாகவோ பாலுறுப்பு குறித்த சித்தரிப்புகள் இடம்பெறுவதில்லை. இந்த அடிப்படையே முக்கியமானது.
ஸ்டேன்லி குப்ரிக்கின், ஐஸ் வைட் ஷட் திரைப்படத்தில் நிர்வாணக் காட்சிகள், குழுவாக பாலுறவு கொள்ளும் காட்சிகள் அதிகம் உண்டு. அவை எந்தவிதத்திலும் பார்வையாளர்களின் காமத்தை கிளறாது. குப்ரிக்கின் நோக்கமும் அதுவல்ல.
ஐஸ் வைட் ஷட் திரைப்படம் மூலம் குப்ரிக் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றி மட்டும் இதுவரை ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் அபிப்ராயங்கள் எழுதப்பட்டுள்ளன. ஐஸ் வைட் ஷட் திரைப்படத்தையும், அஞ்சரைக்குள்ள வண்டியையும் ஒரே தராசில் நிறுப்பது எவ்வளவு அபத்தமோ, அதற்கு ஒப்பானது நவீன இலக்கியங்களில் வரும் பாலுறவு சித்தரிப்புகளை பீப் பாடலுடன் ஒப்பிடுவது.
பீப் பாடல் காரணமாக சிம்பு - அனிருத் மீது பிணையில் வெளிவர முடியாத 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிம்பு - அனிருத் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நவீன இலக்கியவாதியின் மீது சுமத்தி அவரையும் இதே பிரிவுகளில் வழக்கு தொடரவோ கைது செய்யவோ முடியும்.
ஏனெனில் குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்களும், அதனை நடைமுறைப்படுத்துகிறவர்களும் குற்றச்சாட்டுக்குள்ளாகும் படைப்பின் தன்மையை கவனத்தில் கொள்வதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளே இங்கு கவனிக்க தக்கன. அவைகளே இங்கு செயல்படுத்தப்படும்.
டாஸ்மாக்குக்கு எதிராக பாடிய கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை இங்கு கவனத்தில் கொள்வது சிறப்பு.
பீப் பாடலில் வரும் சர்ச்சைக்குரிய வார்த்தையை விமர்சிப்பவர்கள், சிம்பு போன்றோரின் மனநிலையை இதுவரை பொருட்படுத்தியிருக்கிறார்களா என்பது முக்கியம். நான் காதலிக்கிறேன், அதனால் நீயும் என்னை காதலி என்ற சாலையோர ரோமியோக்களின் தொனியையே இவர்களின் படங்கள் கொண்டுள்ளன.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......
நான் உன்னை காதலிக்கிறேன், அதை ஏண்டி உன்னால புரிஞ்சுக்க முடியலை என்ற வசனம் இடம் பெறாத இவர்களின் படம் எது இருக்கிறது? ஒருவன் ஒருத்தியை காதலித்தால் - அது உண்மையான காதலாகவே இருப்பினும் - அவளும் அவனை காதலிக்க வேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம்?
ஒரு பெண்ணை பல பேர் காதலிக்கலாம். அவள் யாரை காதலிக்க வேண்டும் இல்லை நிராகரிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம், தேர்வு. அதை முடிவு செய்ய எந்த ஆணுக்கும் உரிமையோ தகுதியோ இல்லை.
தமிழ் சினிமா நாயகன் தான் காதலிக்கும் பெண் தன்னை காதலித்தே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவன். நாயகன் என்ற அதிகாரத்தில் அவன் நாயகியிடம் அத்துமீறும் போது நாம் புன்னகையுடன் அதனை ரசிக்க ஆரம்பிக்கிறோம்.
இந்த இடத்தில்தான் நாம் சினிமாவின் அதிகாரத்தையும், அதன் ஆபத்தையும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும். நாயகனையும், நாயகியையும் திரையில் காண்பிக்கும் போதே, நாயகனுக்கானவள் நாயகி என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. அப்படி எண்ணும் வகையில் திரைப்படங்கள் நம்மை பயிற்றுவித்திருக்கின்றன. அதனை ஒருவன் நடைமுறையில் செயல்படுத்தும் போது சிக்கல் உருவாகிறது.
சிம்பு தன்னையே தமிழ் சினிமாவாக கருதிக் கொள்கிறவர். திரைப்படங்களில் அவர், காதல் என்றால் என்ன என்பதே தெரியாதவராக நடிப்பதும், உன்னை மாதிரி உலக மகா நடிகனை நான் பார்த்ததில்லை என சந்தானம் அவரை கலாய்ப்பதும், சிம்பு பெருமிதப் புன்னகையுடன் அதனை ஏற்றுக் கொள்வதும், கடைசியில் வெளிவந்த வாலு உள்பட அனைத்துப் படங்களிலும் உள்ளது.
சிம்புவின் காதல் கதைகள் உலகம் அறிந்தவை. அதனை அவர் சொல்லாமல் சொல்கிறாராம். இந்த சுய தம்பட்டமும், அரிப்பும்தான் அவரது படங்களின் காதல் காட்சிகள்.
சினிமா என்ற அற்புதமான ஊடகத்தை தனது சுய அரிப்புக்கும், ஆலாபனைக்குமே சிம்பு பெரும்பாலும் பயன்படுத்தி வந்திருக்கிறார். அதனை தமிழ்ச் சமூகம் இதுவரை கண்டு கொண்டதில்லை. அது தந்த துணிச்சலின் விளைவே பீப் பாடல்.
பீப் பாடலில் சிம்பு பயன்படுத்திய வார்த்தையும், அதன் தொனியும் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை. ஆனால், உண்மையாகவே எதிர்க்கப்பட வேண்டியது அவரது மனோநிலை. அந்த மனோநிலையில் அவர் கழித்துத் தள்ளிய திரைப்படங்கள். பீப் பாடலில் சிம்பு பயன்படுத்திய சர்ச்சைக்குரிய சொல் நாளையே வெளிப்படையாக புழக்கத்தில் வரலாம்.
ஆனால், இந்த வார்த்தை பிரயோகத்துக்கு பின்னாலுள்ள மனோபாவம் எப்போதுமே தவறானது. வார்த்தையை எதிர்க்கும் மூர்க்கத்தில் மனோநிலையை விட்டுவிடப் போகிறோமே என்கிற பதட்டம் ஏற்படவே செய்கிறது.