1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2016 (11:49 IST)

விருதுகளும், வில்லங்கங்களும் - அரவிந்த்சாமியை முன்வைத்து

விருதுகளும், வில்லங்கங்களும் - அரவிந்த்சாமியை முன்வைத்து

விருதுகள் வழங்கப்படும் போதெல்லாம் வில்லங்கங்களும் சேர்ந்தே வரும். அதிலும் திரைப்பட விருதுகள் சர்ச்சையின் ஊற்றுக்கண். 


 


தேசிய திரைப்பட விருதுகள் தவிர்த்து மாநில அரசுகளும் திரைப்படங்களுக்கு விருதுகள் அளித்து வருகின்றன. கேரளாவில் வருடா வருடம் மாநில அரசு சார்பில் முறையாக திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆந்திராவிலும் அப்படியே. அங்கு நந்தி விருதுகள்.
 
தமிழகத்தில் கடந்த ஏழெட்டு வருடங்களாக மாநில அரசு திரைப்பட விருதுகள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. அது ஏன் என்றோ, எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றோ, உடனடியாக திரைப்பட விருதுகள் வழக்கப்பட வேண்டும் என்றோ அரசை வலியுறுத்த தமிழ் சினிமாவில் யாருமில்லை. எல்லோருக்குமே ஒருவித பயம், தயக்கம்.
 
மறுபக்கம் பார்த்தால் தனியார் நிறுவனங்கள், சேனல்கள், நாளிதழ்கள், சங்கங்கள், அமைப்புகள், தனிநபர்கள் என்று பலதரப்பினர் போட்டி போட்டு சினிமா நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். இதில் அனேகமாக அனைத்துமே சுயநல வியாபாரத்தை முன்வைத்து வழங்கப்படுபவை. முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றுகூடும் நிகழ்வை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நாலைந்து மணிநேரங்கள் காண்பித்தால் பார்வையாளர்களை தொலைக்காட்சியோடு கட்டிப்போட்டுவிடலாம், விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் கல்லா கட்டலாம் என்ற வியாபார நோக்கத்துடனே இங்கு விருது விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதற்கு விருது வழங்குகிறவர்கள் கண்டு வைத்திருக்கும் வழிமுறைகளில் ஒன்று, அனைவருக்குமே விருது அளிப்பது. 
 
சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், வில்லன், நகைச்சுவை நடிகர் என்றுதான் முன்பு விருது பிரிவுகள் இருந்தன. இப்போது அது மாறிவிட்டது. சென்ற வருடம் தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் சிறந்த நடிகர் தவிர்த்து பிரபல நடிகர், மாஸ் நடிகர், சென்சேஷனல் நடிகர், எவர்க்ரீன் நடிகர், ஸ்டார் ஆஃப் தி இயர், யூத் ஐகான், அறிமுக நடிகர் என்று விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. விழா நடந்த இடத்தின் செக்யூரிட்டிகள் தவிர்த்து அனைவரும் விருதுகளுடன் வீடு திரும்பினர்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க......

விருது விழாக்களுக்கு அழைக்கும் போதே, சார்/மேடம் உங்களுக்கும் ஒரு விருது இருக்கு என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். விருது என்பது பிரபல நட்சத்திரங்களை தங்களது விழாவுக்கு வரவைப்பதற்கான தூண்டில். 


 
 
சீனியர் நட்சத்திரங்கள் என்றால், சார்/மேடம் நீங்க மேடையில் இரண்டு பேருக்கு விருது அளிக்கிறீங்க என்று அழைப்பு முன் வைக்கப்படும். பெரும்பாலும் இந்த இனிய தூண்டிலில் விரும்பி சிக்கிக் கொள்வார்கள். அரவிந்த்சாமி போல் சில விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்.
 
"பல விருதுகள் கேலிக்கூத்தானவை. நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைக்கும்போதே சொல்வார்கள், நீங்கள் ஒரு விருது பெற்றுள்ளீர்கள் என்று.  அப்போது நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள் என்னால் நிகழ்ச்சிக்கு வரமுடியாது விருதை வேறு யாருக்காவது வழங்குங்கள். எல்லா நடிகர்களும் அவர்களுடைய உழைப்புக்காக விருது பெற தகுதியானவர்களே. எனவே நீங்கள் விரும்பும் யாராவது ஒருவருக்கு அந்த விருதைக் கொடுங்கள் என்று. விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல் ஆக்காதீர்கள்" என அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 
உங்களுக்கும் ஒரு விருது இருக்கு, நிகழ்ச்சிக்கு வந்திடுங்க என்று யாரோ அழைத்ததன் கோபத்தை இப்படி ட்விட்டரில் இறக்கி வைத்துள்ளார். 
 
நட்சத்திர கலைநிகழ்ச்சியுடன் நடத்தப்படும் தனியார் விருது விழாக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி வியாபாரத்துக்காகவே நடத்தப்படுகின்றன. முன்னணி நட்சத்திரங்களே அவர்களின் டார்கெட். அவர்களை விழாவுக்கு வரவைப்பதற்காகவே விருதுகள் வழங்கப்படுகின்றன. நட்சத்திரங்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் இதுபோன்ற விருது விழாக்களை புறக்கணிக்க முன்வர வேண்டும்.