வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

இறை வழிபாட்டில் தேங்காய் உடைக்கப்படுவதன் தத்துவம் என்ன?

தேங்காயின் அமைப்பில் வேறுசில தத்துவங்களும் சொல்லப்படுகின்றன. தேங்காயின் மேல் உள்ள கடுமையான ஓடு மனிதனின் அறியாமை மற்றும் கர்வம்.  அது மாயையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனுள் இருக்கும் வெண்மையான பருப்பு தூய்மையான ஞான நிலை அல்லது ஆத்மஞானம். உள்ளே இருக்கும் நீர் ஆத்மஞானத்தால் விளையும் பரமானந்தம். 
அறியாமை, கர்வம், மாயை என்ற கெட்டியான ஓடு உடைந்தால் மட்டுமே ஆத்மஞானம் கிடைக்கும், அதனுடனேயே இருக்கும் பரமானந்த நிலையை மனிதன்  பருக முடியும் என்கிற தத்துவம் தேங்காய் உடைப்பதன் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது. உள்ளே இருக்கும் ஆத்மஞானத்தையும், பரமானந்த நிலையையும்  ஒருவன் அறிய முடியாமல் என்றுமே மாயை மிகவும் உறுதியாக இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக தேங்காய் இருக்கிறது.
 
சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு. இரண்டு கண்களுடன்  பிறந்த மனிதன் நன்றாகப் பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றான். அதனால் பண்பட்டு பக்குவப்பட்டு அடையும் ஞான  மனநிலைக்கும் கூட தேங்காய் ஒரு குறியீடாக உள்ளது. அதனால் தான் மூன்று கண்களுடன் இருக்கும் தேங்காய் இறைவழிபாட்டுக்கு உகந்ததாக  கருதப்படுகிறது.