செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஹோம வழிபாட்டின்போது தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன...?

ஹோம வழிபாடு என்பது அக்னி வழிபாடு ஆகையினால் ஹோமத்தை நடத்துகின்றவர் அக்னி திக்கான தென் கிழக்குத் திசையில் அமருவது தான் உத்தமமானது.

ஹோமத்தில் பங்கு கொள்கின்ற அனைவரும், தரையில் அமராது, பலகையின் மீதோ, துணியிலோ, தர்ப்பைப் பாயின் மீதோ தான் அமர வேண்டும். இல்லையெனில் இதில் ஹோமத்தின் பலன்களாகக் கிடைக்கின்ற ஆன்மீகக் கதிர்கள் உடலில் சேராது பூமியில் இறங்கி விடும்.
 
ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக் கிண்ணம், மரப் பாத்திரம் அல்லது  வசதியிருப்பின் வெள்ளி, தங்கக் கிண்ணங்களையே வைத்திடுக! தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னை ஓலைப் பாத்திரமும் சிறப்பானதே!
 
ஹோமத்தில் ஆஹுதியாக இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். எவர்ஸில்வர் ஸ்பூன் அல்லது வேறு  உலோகத்தினால் ஆன ஸ்பூனிலோ பசு நெய்யை எடுத்து நேரடியாக அக்னியில் ஊற்றுவது சாபங்களையே பெற்றுத் தரும்.
 
ஹோம மரக்கரண்டியும் குறித்த சில மரங்களினால் செய்யப்படுவதே நன்மை பயக்கும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்கள் ஏற்புடையவை. 
 
ஹோமத்தில் இடப்படும் ஆஹுதிகள் அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டுமே தவிர விறகுகளையோ சிராத் தூள்களையோ ஒரு போதும் பயன்படுத்துதல் கூடாது.
 
ஆண்கள், உடல் சுத்தியுடன் பெண்கள் இருவருமே ஆஹுதிகள் அளித்திடலாம். ஆஹுதி அளிக்கும் பொழுது தர்ப்பையிலான மோதிரத்தை (பவித்திரம்) அணிதல்  விசேஷமானதாகும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக அக்னிக் கதிர்களை நேரடியாக நம் சரீரத்தில் பெற முடியாதாதலின், தர்பையே இதனை நமக்குப் பெற்று  தருகிறது.